×

தைப்பூச தீர்த்தவாரிக்கு வந்த சமயபுரம் மாரியம்மனுக்கு ரங்கம் ரங்கநாதர் சீர்வரிசை

திருச்சி, ஜன.29: ரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு நேற்றிரவு கொள்ளிடம் ஆற்றங்கரையில் சீர்வரிசை வழங்கப்பட்டது. சமயபுரம் மாரியம்மன் ரங்கம் ரங்கநாதரின் தங்கை என்பது பக்தர்களின் நீண்டகால நம்பிக்கை. இதனால் ஆண்டுதோறும் தைப்பூசத்தன்று தீர்த்தவாரிக்கு கொள்ளிடம் ஆற்றுக்கு வரும் மாரியம்மனுக்கு ரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி நேற்று காலை சமயபுரம் கோயிலில் இருந்து உற்சவர் மாரியம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி நொச்சியம் வழியாக ரங்கம் வடக்குவாசல் கொள்ளிடக்கரை வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அலங்கார பந்தலில் எழுந்தருளி அம்பாள் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ரங்கம் ரங்கநாதர் கோயில் கருட மண்டபத்தில் இருந்து பட்டுப்புடவை, வளையல்கள், மாலைகள், சந்தனம், மஞ்சள், பழவகைகள், தாம்பூலம் உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அடங்கிய தட்டுகளை அர்ச்சகர்கள், ஸ்தலத்தார்கள், அறங்காவலர்கள் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் தலையில் சுமந்தும், கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் இசைக்க, மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் வடக்கு வாசல் வழியாக கொள்ளிடம் ஆற்றில் அம்பாள் எழுந்தருளியிருந்த பந்தலுக்கு வந்தனர். அங்கு சீர்வரிசைப் பொருட்களை அறங்காவலர்கள் ரங்காச்சாரி சீனிவாசன், கவிதா ஜெகதீசன், உதவி ஆணையர் கந்தசாமி ஆகியோர் வழங்க அதனை சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் அசோக்குமார், அர்ச்சகர்கள், பணியாளர்கள் பெற்றுக்கொண்டனர்.

இதையடுத்து அம்பாளுக்கு ரங்கநாதர் கோயில் பட்டுவஸ்திரம், மாலைகள் உள்ளிட்டவை அணிவிக்கப்பட்டு மங்களப்பொருட்களுடன் மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ரங்கம் கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், இணை ஆணையர் அசோக்குமார்(கூடுதல் பொறுப்பு), உதவி ஆணையர் கந்தசாமி, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் அசோக்குமார், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Samayapuram Mariamman ,Aurangam Ranganathar ,Thaipusam Tirthavari ,
× RELATED அகிலாண்டேஸ்வரி கோயில் தளிகையுடன்...