போலி ஆவணங்கள் தயார் செய்து 2.80 ஏக்கர் நிலம் அபகரிப்பு வழக்கில் சிக்கிய தொழிலதிபர் சிறையிலடைப்பு

திருச்சி, ஜன.29: திருச்சி மாவட்டம் லால்குடி இடையாற்றுமங்கலத்தை சேர்ந்தவர் வெங்கட்ராமஅய்யர். இவருக்கு சொந்தமான 2 ஏக்கர் 80 சென்ட் நிலத்தை அதே பகுதியை சேர்ந்த மருதை மற்றும் பேச்சியம்மாள் ஆகியோர் 1963ம் ஆண்டு கிரயம் செய்தனர். பின்னர் 1973ம் ஆண்டு மருதை, பேச்சியம்மாளிடம் இருந்து அதே பகுதியை சேர்ந்த குந்தாளத்தம்மாள்(83)என்பவர் வாங்கினார். முதன்முதலில் நிலத்தை விற்ற வெங்கட்ராம அய்யர் மற்றும் அவரது வாரிசுகள் எங்கு உள்ளனர் என்பது தெரியவில்லை. இந்நிலையில் குந்தாளத்தம்மாளுக்கு சொந்தமான 2 ஏக்கர் 80 சென்ட் நிலத்தை பூவாளூர் ராஜா மற்றும் கூகூர் சிவாஜி ஆகியோர் போலி பத்திரம் தயார் செய்து அபகரித்துக்கொண்டதாக திருச்சி மாவட்ட எஸ்பி ஜெயசந்திரனிடம் குந்தாளத்தம்மாள் புகார் அளித்தார். விசாரித்து நடவடிக்கை எடுக்க கூறி, மாவட்ட நிலஅபகரிப்பு பிரிவிற்கு எஸ்பி ஜெயசந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ரியல் எஸ்டேட், லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வரும் பூவாளூரை சேர்ந்த ராஜா(35) என்பவர், நில புரோக்கர் மற்றும் மரம் வெட்டு தொழிலாளியும், உறவினரான சிவாஜி என்பவருடன் இணைந்து குந்தாளத்தம்மாளுக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் 80 சென்ட் நிலத்தை அபகரிக்க முடிவு செய்தனர். வெங்கட்ராம அய்யரின் வாரிசுகளான 4 பேரின் பெயரில் போலி பட்டா, போலியான வாக்காளர் அடையாள அட்டை தயார் செய்து புரோக்கர் சிவாஜி பெயரில் பத்திரம் செய்து, பின் தொழிலதிபர் ராஜா பெயருக்கு மாற்றம் செய்தனர். குந்தாளத்தம்மாளுக்கு தகவல் தெரிந்து டிஆர்ஓவிடம் புகார் அளித்தார். இதையடுத்து பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்ட நிலையில், போலி ஆவணங்கள் மூலம் மீண்டும் பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து புரோக்கர் சிவாஜியை கைது செய்தனர். தலைமறைவான தொழிலதிபர் ராஜாவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் 22 நாட்களுக்கு பிறகு நிலஅபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் தொழிலதிபர் ராஜாவை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More