×

திருச்சி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டு மல்டி ஸ்பெஷாலிட்டியாக மீண்டும் மாற்றம் 1,200 பேருக்கு தடுப்பூசி: டீன் தகவல்

திருச்சி, ஜன.29: திருச்சி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டு 10 மாதங்களுக்கு பின் பல்நோக்கு சிகிச்சை மையமாக (மல்டி ஸ்பெஷாலிட்டி) மீண்டும் மாற்றப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூகானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கட்டும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு மருத்துவமனைகளில் முக்கிய சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன. புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டது. மருத்துவமனைகள் பெரும்பாலும் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டன.

அந்த வகையில் திருச்சி அரசு மருத்துவமனை பல்நோக்கு சிகிச்சை மையம் கடந்த 10 மாதங்களுக்கு முன் பிற சிகிச்சைகள் நிறுத்தப்பட்டு, கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டது. திருச்சி அரசு மருத்துவமனையில் திருச்சி மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். 6 தளங்களை கொண்ட பல் நோக்கு மருத்துமவனை வளாகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, இருதயவியல், குழந்தை மருத்துவம், குழந்தை அறுவை சிகிச்சை, உளவியல், கதிரியக்கவியல், புற்றுநோய் சிகிச்சை என பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், கொரோனாவுக்கு தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வார்டாக இருந்த பல்நோக்கு சிகிச்சை மையம் 10 மாதங்கள் கழித்து மீண்டும் தற்போது செயல்பட துவங்கி உள்ளது. பல்நோக்கு சிகிச்சை மைய கட்டிடத்தை டீன் வனிதா துவக்கி வைத்து கூறுகையில், ‘பல்நோக்கு சிகிச்சை மையத்தில் மீண்டும் அனைத்து நோய்களுக்கும் வழக்கம்போல் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் முன்களப் பணியாளர்களான டாக்டர்கள், நர்ஸ்கள், தனியார் டாக்டர்கள் என 1,200 பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் இல்லை’ என்றார்.

Tags : Corona Special Ward ,Trichy Government Hospital ,
× RELATED வயலூர் சாலையில் நவீன போலீஸ் சோதனை சாவடி