மக்கள் கோரிக்கை வாகன சோதனையில் பைக் திருடன் கைது

மன்னார்குடி, ஜன.29: மன்னார்குடி மதுக்கூர் ரோட்டை சேர்ந்தவர் சுரேஷ் (40). கடந்த 23ம் தேதி இரவு வீட்டுமுன் நிறுத்தியிருந்த தனது பைக்கை காணவில்லை என மன்னார்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் டவுன் எஸ்ஐ முருகன் விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் மதியம் மன்னார்குடி ருக்குமணிபாளையம் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக வந்த ஒரு பைக்கை நிறுத்த முயன்றபோது, வண்டியை நிறுத்தாமல் அதில் வந்த வாலிபர் தப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பைக்கை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட வாலிபரிடம் நடத்திய விசாரணையில் மதுக்கூர் அருகே முக்கூட்டு சாலை பகுதியை சேர்ந்த முகமது சலீம் (19) என்ற பிரபல பைக் திருடன் என்பதும், அவர் ஓட்டி வந்த பைக் மதுக்கூர் ரோடு சுரேஷ் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. பைக்கை பறிமுதல் செய்த போலீசார் முகமது சலீம் கொடுத்த தகவலின் பேரில் மதுக்கூர் அருகே ஒரு தோப்பில் பதுக்கியிருந்த மற்றொரு பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், வழக்கு பதிவு செய்த போலீசார் முகமது சலீமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories:

>