×

உழவர் சந்தை முன் ஆக்கிரமிப்பு வியாபாரிகள், விவசாயிகள் கடும் வாக்குவாதம்

பெரம்பலூர்,ஜன.29: பெரம்பலூர் உழவர் சந்தை முன் ஆக்கிரமிப்பால், வியாபாரிகள், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகளை அதிகாரிகள் சமரசம் செய்தனர். அதனால் போராட்டம் கைவிடப்பட்டது. பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இங்கு சுமார் 100 விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த வேளாண் விளை பொருட்களை சந்தைப்படுத்த தினமும் கொண்டு வந்து விற்பனை செய்து செல்கின்றனர். அதிகாலை 6 மணி முதல் 9 மணி வரை பெரம்பலூர் நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் காய்கறிகளை வாங்கி செல்ல கூடுகின்றனர். இதனால் உழவர் சந்தையில் பதிவு செய்யாத, மார்க்கெட்டில் கடை நடத்தும் வியாபாரிகள் பலர், உழவர் சந்தை முன் ஆக்கிரமித்து தற்காலிக கடை மூலம் தாங்கள் கொண்டு வரும் காய்கறிகளை விற்று வருகின்றனர்.

இதனால் உழவர் சந்தை விவசாயிகளுக்கு மார்க்கெட் வியாபாரிகளால் பாதிப்பு ஏற்படுவதை விளக்கி, அதனை தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டி வேளாண்மை (விற்பனை மற்றும் வணிகம்) துணை இயக்குனர் சிங்காரம் பெரம்பலூர் கலெக்டருக்கும், பெரம்பலூர் நகராட்சி ஆணையருக்குக்கும் கடிதம் அனுப்பினார். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் நேற்று காலை 5 மணியளவில் உழவர் சந்தைக்கு வந்த விவசாயிகள் தங்கள் வாகனங்களை உழவர் சந்தை முன் நிறுத்தி காய்கறிகளை இறக்க முற்பட்டனர். அப்போது, மார்க்கெட் வியாபாரி ஒருவர் தடுத்து நான் இங்கே கடை நடத்த வேண்டும்.

உனது வாகனத்தை இங்கே நிறுத்தாதே எனக்கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிது. இதனால் இவர்களுக்குள் கடும் வாய்த்தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்படுவது போல் இருந்தது. இதனால் ஆத்திரமடைந்த உழவர் சந்தை விவசாயிகள் ஒன்று திரண்டு மார்க்கெட் வியாபாரிகளின் அத்து மீறல்களை, ஆக்கிரமிப்புகளை தடுக்க கோரி, பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். இதனை அறிந்த உழவர் சந்தை வேளாண் உதவி அலுவலர் வெங்கடேசன் விவசாயிகளை அழைத்து பேசினார். இதுதொடர்பாக அதிகாரிகள் மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டனர். அதிகாலை 5 மணியளவில் உழவர்சந்தை முன்புநடந்த இச்சம்பவத்தால் வடக்கு மாதவி சாலையில் பரபரப் பாக காணப்பட்டது.

Tags : traders ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...