×

திரளான பக்தர்கள் தரிசனம் குளித்தலை கடம்பன் துறையில் தைப்பூச திருவிழாவில் 8 ஊர் சுவாமிகள் சங்கமம் தீர்த்தவாரியில் ஏராளமானோர் பங்கேற்பு

குளித்தலை, ஜன.29: காவிரியின் தென்கரையில் குளித்தலை கடம்பன் துறையில் அமைந்திருக்கும் கடம்பவனேஸ்வரர் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுதோறும் தைப்பூச விழா மிகவும் கோலகலமாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் 8 ஊர் சாமிகள் சங்கமித்து தீர்த்தவாரி கண்டருதல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். இந்நிலையில் நேற்று கடம்பவனேஸ்வரர் கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி குளித்தலை கடம்பர் கோயில், அய்யர்மலை, பெட்டவாய்த்தலை, ராஜேந்திரம், திருவேங்கிமலை, முசிறி, வெள்ளூர், கருப்பத்தூர் ஆகிய 8 ஊர்களில் இருந்து வரும் உற்சவ மூர்த்திகள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு மேல் சந்திப்பு தீபாராதனை சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தைமாதத்தில் வரும் இந்த தைப்பூச திருவிழா எட்டு ஊர் சாமிகள் ஒன்று கூடுவதால் அரசு தரப்பில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், முககவசம் அணிந்து வரவேண்டும், கடம்பன் துறைகள் தீர்த்தவாரி நடைபெறும்போது குறைந்த அளவே பொதுமக்களை அனுமதிக்கப்படும், கோவிலை சுற்றி கடைகள் அமைக்க அனுமதி இல்லை என அறிவித்திருந்தனர். இந்நிலையில் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்ததின் பேரில் அதிகாரிகள் ஆய்வு செய்து கடம்பந்துறை ஆற்றுப்பகுதியில் விரிவான இடத்தை தேர்வு செய்து அவ்விடத்தில் சமூக இடைவெளியுடன் பூஜை பொருள் கடைகள் வைக்க இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு கடைகள் கடம்பந்துறை ஆற்றுப்பகுதியில் போடுவதற்கு அனுமதி அளித்துள்ளனர். கடைகளும் கடம்பந்துறை வளாகத்தில் போடப்பட்டுள்ளது. இருப்பினும் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் குளித்தலை கடம்பன் துறை விழாக்கோலம் பூண்டது.

இருப்பினும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி தீர்த்தவாரிக்கு சிவாச்சாரியர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். 8 ஊர் சாமி தரிசனம் செய்ய பொதுமக்கள் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் வருவதற்கு தனிவழி அமைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் கடைகளுக்கு செல்வதற்கு தனிவழி அமைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவத்துறை, தீயணைப்பு துறை, காவல்துறை கட்டுப்பாட்டு அறை வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த ஆண்டு அனைத்து சாமிகளும் காலம் தாழ்ந்து வந்ததால் தீர்த்தவாரி குறிப்பிட்ட நேரத்தை தவிர்த்து தாமதமாக நடைபெற்றது. இதனால் பொதுமக்கள் பொறுமை இழந்து பாதுகாப்பு தடுப்பையும் மீறி தீர்த்தவாரி பகுதிக்கு சென்றதால் சிவாச்சாரியார்கள் திணறும் நிலை ஏற்பட்டது. இனி வரும் காலங்களிலாவது தீர்த்தவாரி நடைபெறும் இடத்தில் முழு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : Crowds ,devotees ,festival ,field ,Darshan Kulithalai ,Kadamban ,
× RELATED கோவிந்தா! கோவிந்தா! கோஷத்துடன்...