×

சிறு நிறுவனங்கள் பிரதமர் உணவு பதப்படுத்தும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்


கரூர், ஜன. 29: கரூர் மாவட்ட கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் 2020-21ம் ஆண்டு முதல் 2024-25 வரை ஐந்து ஆண்டுகளுககு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தனிநபர் அடிப்படையில் ஏற்கனவே, உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், குழு அடிப்படையில் பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தருதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

மேலும், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் போன்றவைகளுக்கும் நிதியுதவி வழங்கப்படும். சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பில் 35 சதவீதம் அதிகபட்சமாக ரூ. 10லட்சம் வரை மானியம் பெற வாய்ப்புள்ளது. வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும், சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தொழில் கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும். இது தொடர்பாக, மாவட்ட தொழில் மையம் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஆகியோரை தொழில் முனைவோர்கள் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்த திட்டத்தை கரூர் மாவட்டத்தில் செயல்படுத்த விண்ணப்பங்கள் பெறவும், திட்ட அறிக்கை தயாரிக்கவும் கரூர் மாவட்டத்திற்கு வளநபர் (ரிசோர்ஸ் பெர்ஷன்) தேர்வு செய்யப்படவுள்ளனர். தேர்வு செய்யப்படும் நபர் உணவு பதப்படுத்தும் தொழிலில் முன் அனுபவம், திட்ட அறிக்கை தயார் செய்வதில் போதிய முன் அனுபவம் பெற்ற பட்டைய, பட்டப்படிப்பு தகுதி பெற்று இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபருக்கு பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கமிஷன் ஊதியமாக வழங்கப்படும். விண்ணப்பங்கள் ஜனவரி 29ம்தேதி காலைக்குள் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), ராயனூர் அலுவலகத்துக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : businesses ,
× RELATED சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான...