×

தைப்பூச திருவிழாத்தையொட்டி கந்தசுவாமி கோயிலில் 508 பால்குட ஊர்வலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்போரூர்: தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று அனைத்து முருகன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் காவடி எடுத்து, மொட்டை அடித்து முருகனை தரிசனம் செய்தனர். இதையொட்டி திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கார், பைக், வேன், பஸ்களில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வந்தனர். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக பயணம் செய்து வந்தனர். அனைவரும், கோயிலை ஒட்டி உள்ள திருக்குளத்தில் நீராடி மொட்டை அடித்து ஏராளமான பக்தர்கள் அலகு தரித்து பால் காவடி, புஷ்ப காவடி, வேல் காவடி எடுத்து மாட வீதிகளில் உலா வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

இதுமட்டுமின்றி தைப்பூச உற்சவ கமிட்டி சார்பில் 508 பால்குட ஊர்வலம் நடந்தது. திருப்போரூர் வேம்படி வினாயகர் கோயிலில் இருந்து பழைய மாமல்லபுரம் சாலை, நான்கு மாடவீதிகள், சன்னதி தெரு வழியாக ஊர்வலம் சென்று கோயிலை அடைந்து,  அங்கு உற்சவருக்கு பால் அபிஷேகம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் அனுப்பப்பட்டனர். பல்வேறு பக்தி அமைப்புகளின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, எஸ்ஐ ராஜா தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். செயின் பறிப்பு சம்பவங்களை தடுக்கும் வகையில் கோயிலுக்கு வந்த பெண்களுக்கு அவர்களது தங்க நகைகளை பாதுகாத்து கொள்ளும் வகையில் பாதுகாப்பு வளையம் வழங்கப்பட்டது.

செய்யூர்: செய்யூர் அடுத்த பெருக்கரணை கிராமத்தில் நடுபழனி என்றழைக்கப்படும்  மரகத பாலதண்டாயுதபாணி கோயிலில் இந்தாண்டு தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, முருகனுக்கு சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன. இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி மற்றும் பால்குடங்கள் எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்று கோயிலை வந்தடைந்தனர். அங்கு, கருவறையில் உள்ள மரகத தண்டாயுதபாணிக்கு பால் அபிஷேகம் செய்தனர். குன்றத்தூர்: தைப்பூசத்தை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோயிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், ஜவ்வாது உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.

Tags : procession ,Balkuda ,occasion ,festival ,devotees ,Kandaswamy temple ,
× RELATED மேலூர் அருகே வல்லடிகாரர் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு