பேச மறுத்ததால் ஆத்திரம் காதலிக்கு சரமாரி கத்திக்குத்து: காதலன் வெறிச்செயல்

புழல்: புழல் அடுத்த விநாயகபுரம் மாதவன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்த ஆதிமுத்து. இவரது மனைவி சவுரி. இவர்களது மகள் பிரேமலதா (22). ஆதிமுத்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனையடுத்து, சவுரி தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். பிரேமலதா, அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  இவருக்கும், அதே பகுதியை சேர்ந்தவரும், செல்போன் கடை நடத்தி வருபவருமான சுதாகருக்கும் (26) பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியது. கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர். இந்நிலையில், சுதாகரின் நடவடிக்கை சரியில்லாததால், கடந்த சில மாதங்களாக அவரை சந்திப்பதையும், செல்போனில் பேசுவதையும் பிரேமலதா தவிர்த்து வந்துள்ளார்.  சுதாகர் பலமுறை முயன்றும் பிரேமலதா பேச மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுதாகர் நேற்று அதிகாலை 6 மணிக்கு பிரேமலதா வீட்டுக்கு சென்றார்.

அங்கு, வெளியில் நின்றிருந்த பிரேமலதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிறு, தலை, கை ஆகிய இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.  படுகாயமடைந்த  பிரேமலதா அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் சவுரி மற்றும் அக்கம் பக்கத்தினர் பிரேமலதாவை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில், புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுதாகரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>