வேலூர், ஜன.29:வேலூர் மாவட்டத்தில் குட்கா பதுக்கலை தடுக்க போலீசார் நேற்று அதிரடி ரெய்டு நடத்தினர். பெங்களூர் பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்கள் வேலூர் மற்றும் சென்னைக்கு அடிக்கடி கடத்தி வரும் சம்பவங்கள் நடக்கிறது. இவ்வாறு டன் கணக்கில் கடத்தி வரப்பட்ட குட்கா பொருட்களை பள்ளிகொண்டா டோல்கேட், வேலூர், சத்துவாச்சாரி ஆகிய இடங்களில் போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இதனை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தும்படி எஸ்பி செல்வகுமார் உத்தரவிட்டார்.அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி, வேலூர், குடியாத்தம் ஆகிய சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஏஎஸ்பி மற்றும் டிஎஸ்பிக்கள் தலைமையில் போலீசார் நேற்று காலை முதல் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வீடுகள், சந்தேகப்படும்படி உள்ள இடங்களில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளதா? என சோதனை நடத்தினர்.