×

எருது விடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள் 10 பேர் காயம் கணியம்பாடி அருகே

அணைக்கட்டு, ஜன.29: கணியம்பாடி அருகே நடந்த எருது விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில், காளைகள் முட்டியதில் 10 பேர் காயமடைந்தனர். வேலூர் தாலுகா, கணியம்பாடி அடுத்த சின்னபாலம்பாக்கம் கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடந்தது. துணை கலெக்டர் தனஞ்செழியன் தலைமையில் தாசில்தார் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் திவ்யா, கால்நடை உதவி இயக்குனர் அந்துவன், திமுக ஒன்றிய பொறுப்பாளர் கஜேந்திரன், பகுதி செயலாளர் தங்கதுரை மற்றும் விழா குழுவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுகொண்டனர். தொடர்ந்து விழா காலை 10 மணியளவில் தொடங்கியது. விழாவை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இளைஞர்களுடன் சேர்ந்து தடுப்பு கொம்பின் மீது ஏறி நின்றபடி விழாவை ரசித்தார். விழாவில் கணியம்பாடி, பென்னாத்தூர், சோழவரம், வேலூர், அணைக்கட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து அழைத்து வரபட்ட 135 மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின. உள்ளூர் மற்றம் வெளியூர்களில் இருந்து ஆயிரகணக்கான மக்கள் விழாவை ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து விழா பிற்பகல் 2 மணியளவில் முடிக்கபட்டது. விழாவில் அதிவேகமாக சீறிபாய்ந்து ஓடி முதலிடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ₹50 ஆயிரம் வழங்கப்பட்டது. அதேபோல், மொத்தம் 41 பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகள் முட்டியதில் காயமடைந்த 10 பேருக்கு அங்கு முகாமிட்டிருந்த கணியம்பாடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். தாலுகா காவல் நிலைய போலீசார் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags : Kanyambadi ,bullfighting ,
× RELATED 2 வீடுகளில் பூட்டு உடைத்து 27 சவரன்...