×

மலேசியாவில் தமிழை வளர்க்கும் இந்தியர்கள்: மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

புதுடெல்லி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒன்றிய அரசின் பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி மூலம் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று 130ம் அத்தியாயத்தில் அவர் பேசுகையில், ‘இந்தியா தற்போது உலகின் மூன்றாவது பெரிய ‘ஸ்டார்ட்-அப்’ சூழல் அமைப்பாக உயர்ந்துள்ளது.

விண்வெளி, செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை ஹைட்ரஜன் போன்ற துறைகளில் இந்திய இளைஞர்கள் முத்திரை பதித்து வருகின்றனர். மலேசியாவில் வசிக்கும் இந்தியர்கள் தமிழை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர். அங்கு 500க்கும் மேற்பட்ட தமிழ் பள்ளிகள் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாளை கொண்டாடப்படவுள்ள குடியரசு தின விழாவானது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு மரியாதை செலுத்தும் வாய்ப்பாகும். இன்று தேசிய வாக்காளர் தினம் அனுசரிக்கப்படுகிறது.

வாக்காளர்களே ஜனநாயகத்தின் ஆன்மா. இளைஞர்கள் 18 வயதை எட்டும்போது வாக்காளராக மாறுவது இந்தியர்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மைல்கல். எனவே இளைஞர்கள் வாக்களிக்க பதிவு செய்வது மிக அவசியம். குஜராத் கிராமத்தில் செயல்படும் கூட்டு சமையலறை, காஷ்மீரில் போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய மிர் ஜாபர் மற்றும் மத்திய பிரதேசத்தில் மூலிகை செடிகளை ஆவணப்படுத்தும் வனக்காவலர் ஜெகதீஷ் பிரசாத் ஆகியோரின் சமூக பணிகள் பாராட்டத்தக்கது’ என்று விரிவாக பேசினார்.

Tags : Modi ,New Delhi ,National Voters' Day ,Union Government ,
× RELATED மொழிப்போர் தியாகிகள்...