சிவகிரியில் நள்ளிரவில் கார், 3 பைக் தீ வைத்து எரிப்பு

சிவகிரி, ஜன. 29:  சிவகிரியில் நள்ளிரவு நேரத்தில் கார், 3 பைக் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகிரி 11ம் நம்பர் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனங்களுக்கான  உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் கந்தையா மகன் முகேஷ்  பாண்டியன் (22). இவரது கடைக்கு அருகில் வாகன நிறுத்தும் இடம் உள்ளது.  இந்த இடத்தில் கார் மற்றும் 3 பைக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று  முன்தினம் நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள், இங்கு  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், 3 பைக்குகளை தீ வைத்து எரித்து விட்டு தப்பினர். வாகனங்களில் தீப்பற்றி எரிவதை கண்ட அப்பகுதி மக்கள், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய  அலுவலர் சேக் அப்துல்லா தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீ  மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இருப்பினும் கார், 3 பைக்குகள்  முற்றிலுமாக தீயில் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம். இதுகுறித்து முகேஷ் பாண்டியன் சிவகிரி போலீசில்  புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தன், தனிப்பிரிவு எஸ்ஐ  வேல்முருகன், தடயவியல் துறை ஆனந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்று விசாரணை மற்றும் ஆய்வு செய்தனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு களையும் பார்வையிட்டனர். மேலும் வழக்கு பதிந்து கார், பைக்குகளுக்கு தீ வைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு சிவகிரி அடுத்துள்ள ராயகிரியில் நள்ளிரவில் 2 பைக்குகள், முன்விரோதம் காரணமாக தீ வைத்து எரிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், மேலும் சிலரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>