×

சங்கரன்கோவிலில் மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு

சங்கரன்கோவில், ஜன. 29: சங்கரன்கோவில் நகராட்சி பகுதியில் மீண்டும்  குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். நகராட்சி சார்பில் ஒப்பந்த அடிப்படையில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் விநியோகப்பதில் குளறுபடிகள் நிலவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் முதல் நிலை நகராட்சி, சங்கரன்கோவில் ஆகும். இந்நகராட்சிக்கு தாமிரபரணி  கூட்டுக்குடிநீர் திட்டம்,  மானூர் கூட்டுக்குடிநீர் திட்டம்,  கோட்டமலையாறு  கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு பருவமழை கைகொடுக்காததால், தண்ணீர் வரத்து குறைந்து கடந்தாண்டு நகர பகுதிகளில் 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். கடந்த பருவமழை பரவலாக பெய்ததால், தற்போது 10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சியினர், கலெக்டரை நேரில் சந்தித்து வலியுறுத்தியதன் பலனாக அப்போதைய கலெக்டர் அருண்சுந்தர் தயாளனும் கோட்டமலையாறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு சீராக குடிநீர் கொண்டு வருவதற்கு ஆலோசனை வழங்கினார்.
 
இந்நிலையில் ஜனவரி முதல் வாரத்தில் கொட்டித் தீர்த்த மழையால் நீரேற்றும் நிலையங்களில் மோட்டார்கள், தண்ணீரில் மூழ்கி அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து குடிநீரேற்றும் நிலையங்களில் பணிகள் முடிக்கப்பட்டு விநியோகம் சீராக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், சங்கரன்கோவில் பகுதியில் 20  நாட்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த  சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.  இதனிடையே நகராட்சி மூலம் ஒப்பந்த அடிப்படையில் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்வதிலும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. முதல் நாள் வழங்கப்பட்ட பகுதிக்கே மறுநாளும் டிராக்டரில் தண்ணீர் விநியோகிக்கப்படுவதால், தேவையான பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காத சூழல் நிலவுகிறது. மேலும் வீடுகளின் அருகே கொண்டு வந்து விநியோகிக்காமல், சில இடங்களில் தெரு முனைகளிலேயே டிராக்டர் நிறுத்தப்படுவதால், முதியவர்கள் குடங்களுடன் தண்ணீர் பிடித்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் முன் அறிவிப்பின்றி டிராக்டரில்  தண்ணீர் கொண்டு வருவதால், சம்பந்தப்பட்ட பகுதியில் வசிக்கும் கூலி வேலைக்கு செல்வோர் தண்ணீர் பிடிக்க முடியாமல் காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இதுகுறித்து சங்கரன்கோவில் பகுதி மக்கள் கூறுகையில், டிராக்டரில் தண்ணீர் விநியோகம் என்பது கண்துடைப்பு நாடகமாக  உள்ளது. குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணாமல் டிராக்டரில் வழங்குவதால் அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதில்லை. டிராக்டர் குடிநீர் விநியோகத்தை நிறுத்தி விட்டு குடிநீர் குழாய்கள் மூலம் விநியோகிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : Sankarankoil ,
× RELATED கரிவலம்வந்தநல்லூர் அருகே...