×

டெல்லியில் பாஜகவில் இணைந்தார் மாநில வளர்ச்சி தான் முக்கியம் நமச்சிவாயம் பரபரப்பு பேட்டி

புதுச்சேரி, ஜன. 29: புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த நமச்சிவாயம் தலைமையில் 2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் சந்தித்து வெற்றி பெற்றது. இதனால் மாநில தலைவரான நமச்சிவாயத்துக்கு, காங்கிரஸ் தலைமை முதல்வர் பதவியை வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாத நாராயணசாமியை எம்எல்ஏக்கள் ஆதரித்ததால் அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது. இதனால் நமச்சிவாயம் கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து கட்சித் தலைமை அவரை சமாதானப்படுத்தி அமைச்சர் பதவியை வழங்கியது. அவரிடம், பொதுப்பணி, உள்ளாட்சி, கலால், வீட்டு வசதி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட முக்கிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன.

இருப்பினும் கடந்த ஆண்டு அதிரடியாக நமச்சிவாயத்தின் மாநிலத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் முதல்வர் நாராயணசாமிக்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடும், மோதலும் தொடர்ந்து இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 25ம் தேதி அவரது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவருடன் எம்எல்ஏ தீப்பாய்ந்தானும் ராஜினாமா கடிதம் கொடுத்தார். இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக விமானம் மூலம் டெல்லி சென்ற நமச்சிவாயம் மற்றும் தீப்பாய்ந்தான் ஆகியோர் நேற்று மாலை பாஜ கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் முன்னிலையில் பாஜவில் இணைந்தனர்.

இதையடுத்து நமச்சிவாயம் கூறுகையில், வளமான புதுவை, வலிமையான பாரதம் அமைக்க தான் பாஜவுடன் நாங்களும் தற்போது ஒன்று சேர்ந்துள்ளோம். இதில் பிரதமர் நரேந்திர மோடியை பொறுத்தமட்டில் மிகவும் திறமையானவர், தைரியம் மிக்கவர் ஆவார். குறிப்பாக அவரது முயற்சியால் நாடு ஒளிருவது போன்று, புதுவை மாநிலமும் ஒளிர வேண்டும். ஆனால் தற்போது முதல்வராக இருக்கும் நாராயணசாமியின் கடந்த கால தவறான வழிகாட்டுதலால் புதுவை மாநிலம் வீணாகிவிட்டது. இதில் 2021ம் ஆண்டு புதுவை சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ஆட்சியை அமைக்க நாங்கள் இரவு பகல் பாராது கண்டிப்பாக உழைத்து வெற்றி பெறுவோம்.

 எங்களை பொறுத்தவரையில் புதுவை மாநிலத்தை தலைசிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டுள்ளோம். எங்களுக்கு மாநிலத்தின் வளர்ச்சி என்பது தான் மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது. புதுவை மக்களும் மாநிலத்தில் மாற்றத்தை கொண்டுவர தயாராகி விட்டார்கள், என்றார்.

Tags : BJP ,Delhi ,interview ,Namasivayam ,state ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...