×

நமச்சிவாயத்தின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விடும் காங்கிரசில் இருந்து யாரும் செல்ல மாட்டார்கள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி, ஜன. 29: புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18.43 லட்சம் செலவில் காரைக்கால் திருபட்டினம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் வளாகத்தில் மேற்கு பகுதியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணியை துவக்கி வைப்பதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி பணிகளை துவக்கி வைத்தார்.  இதில் வைத்திலிங்கம் எம்பி, கீதாஆனந்தன் எம்எல்ஏ, துணை ஆட்சியர் ஆதர்ஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 விழா முடிவில் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், நான்கரை ஆண்டுகளாக ஆட்சியில் 85 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம். மத்திய அரசு மானியத்தை குறைத்து கொடுக்கும் நிலையிலும் சிக்கன நடவடிக்கையை கடைபிடித்து வருவாயை பெருக்கி மாநிலத்தில் வளர்ச்சியை கண்டுள்ளோம். ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் வரவுள்ளது. தேர்தலை சந்திப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் செய்து வருகிறோம்.
 நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்கள். அது அவர்களது தனிப்பட்ட முடிவு. ஆனால், நமச்சிவாயம் 3 காரணங்களை கூறி பதவி விலகியுள்ளார். அதாவது, அவரது இலாக்காக்களில் நான் தலையீடு செய்ததாகவும், நிதி ஒதுக்கி கொடுக்கவில்லை, மத்திய அரசோடும், கவர்னரோடும் இணக்கமாக இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

 கடந்த நான்கரை ஆண்டுகளாக நமச்சிவாயம் வகித்த துறைகளில் நான் எந்த அளவிலும் தலையிட்டது கிடையாது. கொரோனா தொற்றால் வருவாய் குறைந்து ரூ.500 கோடிக்கு துண்டு விழுந்துள்ளது. இதனால் அவர் துறை மட்டுமல்லாது எல்லா துறைகளிலும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கிய நிதியை கூட அவர் செலவு செய்யவில்லை.  நான் மத்திய அரசு, கவர்னரோடு இணக்கமாக சென்றிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.  மத்திய அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதியை ெகாடுக்கவில்லை. இதுகுறித்து மத்திய அரசிடம் கேட்டபோதும் நிதி கொடுக்கவில்ைல. மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம். ஆனால், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி இருப்பதால் எங்களை புறந்தள்ளி கெட்டப்பெயரை உருவாக்க வேண்டும் என்று செயல்பட்டு வருகிறது.

 கவர்னர் எல்லா விதிகளையும் மீறி கோப்புகளுக்கு அனுமதி அளிக்காமல் திருப்பி அனுப்பும் வேலையை செய்து வருகிறார். இதனால் அனைத்து கட்சிகளுடன் இணைந்து பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். உள்ளாட்சி தேர்தல் அதிகாரியை கவர்னர் நியமித்தார் என்று அவரே நீதிமன்றம் சென்றுள்ளார். ஆகவே, கவர்னருடன் நான் இணக்கமாக இருக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நமச்சிவாயம் வெளியே செல்வதற்காக பல காரணங்களை சொல்ல வேண்டும் என்பதற்காக இதை கூறியுள்ளார். தற்போது கூட்டணி தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. காங்கிரஸ், திமுக மற்றும் மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்துள்ளோம். கூட்டணியை சோனியா, ராகுல், ஸ்டாலின் ஆகியோர் முடிவு செய்வார்கள். 2021 சட்டமன்ற தேர்தலில் அவர்களது முடிவுக்கு ஏற்ப செயல்படுவோம்.

 காங்கிரசில் இருந்து 3 நிர்வாகிகள், கீழ்மட்டத்தில் இருந்து 7 பேர் என 10 பேர்தான் சென்றுள்ளனர். அனைத்து தலைவர்களும், தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு செயற்குழு கூட்டத்தை கூட்டினோம். எல்லா நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். காங்கிரசுக்கு பல தலைவர்கள் வந்துள்ளனர், பல தலைவர்கள் சென்றுள்ளனர். காங்கிரசை வலுவான இயக்கமாக உருவாக்க நிர்வாகிகளும், தொண்டர்களும் பாடுபடுவோம். காங்கிரசில் இருந்து 7 பேர் செல்வார்கள் என்றார்கள். ஆனால் 2 பேர் தான் சென்றுள்ளார்கள். கட்சி நிர்வாகிகள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். காங்கிரசில் இருந்து இனிமேல் யாரும் செல்ல மாட்டார்கள். புதுவையில் பாஜக போனி ஆகாத கட்சி. அந்த கட்சிக்கு யாரும் செல்ல மாட்டார்கள். அங்கு செல்பவர்களின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விடும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : No one ,Congress ,Narayanasamy ,end ,
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...