திருவட்டார் அருகே வீட்டில் மின்கசிவால் பிரிட்ஜ் தீ பிடித்தது

குலசேகரம், ஜன.29:  திருவட்டாரில் நேற்று காலை மின்கசிவால் பிரிட்ஜில் தீப்பிடித்ததால் வீட்டில் பயங்கர தீ  விபத்து ஏற்பட்டது. வீட்டில் இருந்த 5 பேர்  வெளியே ஓடி உயிர் தப்பினர். இருப்பினும் தீ விபத்தில் வீட்டு உபயோக  பொருட்கள் எரிந்து சாம்பலானது. திருவட்டாரை அடுத்த இரவிபுதூர்கடை  செப்பவிளையை சேர்ந்தவர் அகமதுகபீர் (38). வெளிநாட்டில் பணிபுரிந்து  வருகிறார். அவரது வீட்டில் மனைவி பபிலா, 3 குழந்தைகள், பபிலாவின் தாய் ஆகிய  5 பேர் வசித்து வருகின்றனர். நேற்று காலை  பபிலாவின்  தாய் சமையலறைக்கு சென்றார். அப்போது பிரிட்ஜில் மின்கசிவு ஏற்பட்டு தீ எரிந்துகொண்டிருந்தது.

உடனடியாக பபிலாவை எழுப்பி  தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் தீ மளமளவென எரிந்ததால்  குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு 5 பேரும் வீட்டை விட்டு தப்பித்து ஓடினர்.  இதனால் அவர்கள் உயிர் தப்பினர். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை  அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் குழித்துறை  தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே வீரர்கள்  விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் சமையலறை முற்றிலும் எரிந்து  சாம்பலானது. காங்கிரீட் சிலாபுகளும் உடைந்து விழுந்தன. அதோடு வீட்டின் பிற  அறைகளில் உள்ள டியூப் லைட், பேன் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்களும் நாசமானது. இந்த சம்பவம்  அந்த பகுதியில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது.

Related Stories:

>