- கே. ஸ்டாலின்
- சென்னை
- மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நரேந்திர மோடி
- டாபா எஞ்சின்
- முதல்வர்
- மு. கே.
- ஸ்டாலின்
சென்னை: பிரதமர் சொல்லும் “டபுள் இன்ஜின்” எனும் “டப்பா இன்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலையில் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் எதுவும் சொல்லாமல் மோடி டெல்லிக்கு பறந்தார். தமிழகத்துக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து நெருக்கடி கொடுக்கும் வகையில் நிதி குறைப்பு, நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பு போன்ற தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒன்றிய பட்ஜெட்டிலும், திட்டங்களை அறிவிப்பதிலும், நிதி ஒதுக்குவதிலும் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
அதிகமான வருவாயை ஒன்றிய அரசுக்கு வழங்கும் தமிழகத்திற்கான திட்டங்கள் எதுவுமே கிடைக்காமல் இருப்பதும் தமிழக மக்களை கவலையடையச் செய்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளும் கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசு பாராமுகமாகவே இருந்து வருகிறது. உத்தரபிரதேசம், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு நிதிகளை வாரி வழங்கி வருகிறது. ஆனால், ஒன்றிய அரசின் நிதி ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டாலும், தமிழகம் போராடி பல துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்தநிலையில், தேர்தல் பொதுக்கூட்டத்துக்காக நேற்று மதுராந்தகம் வரும் பிரதமர் மோடி வந்தார். இதையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதுகுறித்து அவர் நேற்று காலையில் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே… தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் ‘‘சமக்ரசிக்சா’’ கல்வி நிதி எப்போது வரும்?. ‘எல்லை நிர்ணயத்தில் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?. பாஜவின் முகவர் போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?. தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?.
மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் ‘‘விபிஜி ராம்ஜி’’ கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்?. பத்தாண்டுகளாக ‘இன்ச் இன்ச்’சாக ஒன்றிய பா.ஜ. அரசு இழைத்து வரும் மதுரை ‘‘எய்ம்ஸ்’’ எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?. ஓசூர் விமான நிலையம், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?. கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்?. தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ. கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!. இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.
இந்நிலையில், மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின் இரட்டை இன்ஜின் அரசாங்கம் மிகவும் அவசியம் ஆகும். மத்திய அரசோடு இணைந்து பயணிக்கும் அரசாங்கம், இசைவாக பயணிக்கும் அரசாங்கம் எப்போது ஏற்படுமோ, அப்போதுதான் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது மேலும் சுலபமாக இருக்கும்’’ என்று கூறினார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தனது சமூக வலைதளப் பதிவு மூலம் பதில் அளித்துள்ளார். அதில், ‘பிரதமர் சொல்லும் “டபுள் இன்ஜின்” எனும் “டப்பா இன்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது! பிரதமர் அவர்களே. ஒன்றிய பா.ஜ. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.
நீங்கள் சொல்லும் “டபுள் இன்ஜின்” மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா இன்ஜின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் NDABetraysTN என்பதை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். டெல்லியின் ஆணவத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது,’என்று கூறியுள்ளார். பிரதமர் மோடி சென்னை வருவதற்கு முன்னதாக காலையில் அடுக்கடுக்கான கேள்விகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டதும், அதற்கு பதில் அளிக்காமல், மாநில தேர்தல்களில் அவர் இரட்டை இன்ஜின் அரசாங்கம் குறித்து பேசுவதுபோல தமிழகத்தில் பேசியதும், அதற்கு முதல்வர் பதிலடி கொடுத்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* ரூ.3,458 கோடி ‘‘சமக்ரசிக்சா’’ கல்வி நிதி எப்போது வரும்?
* ஓசூர் விமான நிலையம், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?.
* மதுரை ‘‘எய்ம்ஸ்’’ எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
* இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?.
