×

படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளத்தில் மகசூல் இல்லை சிவகாசி பகுதி விவசாயிகள் வேதனை

சிவகாசி, ஜன. 29: சிவகாசி பகுதியில் சித்தமநாயக்கன்பட்டி, புதுக்கோட்டை, கொத்தனேரி, செவலூர் உட்பட பல்வேறு கிராமங்களில் சுமார் 2ஆயிரத்து 700 ஹெக்டர் மானாவாரி விளைநிலங்கள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் பருவமழையை நம்பியே விவசாயிகள், மானாவாரி விவசாயம் செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் கனமழை பெய்தால் மட்டுமே மானாவாரி பயிர்களான மக்காசோளம், எள், தக்காளி மற்றும் பயிறு வகைகள் அதிகம் விளையும். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை பெய்ததும் சிவகாசி கிராம பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தனர். தற்போது பயிர்கள் வளர்ந்து மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. தாமதமான மழை, படைப்புழு தாக்குதல் போன்ற காரணங்களால் மக்காச்சோளம் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது என விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயி கருப்பசாமி கூறுகையில், `` எங்கள் பகுதியில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மக்காச்சோளம் பயிரிட்டு வருகிறோம். இந்த வருடம் உரிய நேரத்தில் மழை பெய்ததால் பயிர் நன்றாக வளர்ந்திருந்தது. மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் என்பது எப்பொழுதுமே உள்ளதுதான். ஆனால், இந்த முறை அதிகமான படைப்புழு தாக்குதலால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பல கட்டங்களாக ரசாயன உரங்கள் அடித்துப் பார்த்தும் அந்தப் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடந்த வருடம் 6 ஏக்கரில் 45 குவிண்டால் சோளம் கிடைத்தது. ஆனால், இந்த முறை 30 குவிண்டால் கூட தேறவில்லை நகையை அடகு வைத்தும், பணம் கடன் வாங்கியும் விவசாயம் செய்தோம். ஆனால், பலனில்லை. எனவே, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறினார்.

Tags : area farmers ,Sivakasi ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை