பொய் வழக்கு என முடிக்கப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு: போடி நீதிமன்றம் அதிரடி

போடி, ஜன.29: இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கை மறு விசாரணை செய்யும்படி போடி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சின்னமனூரை சேர்ந்தவர்  செல்வம் மகன் சதீஷ்குமார்(29). இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2019ல் பேஸ்புக்  மூலமாக நட்பு உருவானது. அவரை தனது ஊருக்கு வரவழைத்த சதீஷ்குமார், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் திருமணம் செய்யவில்லை. எனவே பாதிக்கப்பட்ட பெண் போடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் மீனாட்சி, பொய் வழக்கு என கூறி முடித்துவிட்டார்.

எனவே பாதிப்படைந்த  இளம்பெண் போடி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த சதீஷ்குமார், அவரது தாயார் விஜயா, தம்பி நிதிஷ்குமார், உத்தமபாளையத்தை சேர்ந்த உறவினர் அனுஷா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மறுவிசாரணை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அருண்குமார், வேறு அதிகாரியை நியமித்து புலன் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு போடி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபனுக்கு உத்தரவிட்டார். இது குறித்து டிஎஸ்பி பார்த்திபனிடம் கேட்டபோது, பாலியல் வழக்கு குறித்து மறு விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

Related Stories:

>