×

தேனி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் கால்கள் பத்திரம் காத்திருக்குது அபாயம்

தேனி, ஜன.29: தேனி கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் அகழியின் உருளை கம்பிகள் அதிக இடைவெளியுடன் உள்ளன. இதில் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளின் கால்களும் சிக்கி பரிதவித்து வருகின்றனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தேனி கருவேல்நாயக்கன் பட்டியில் உள்ளது. அலுவலகத்தின் முன்புறம்  நுழைவுவாயில் மற்றும் பின்புற வாயில் பகுதியில் கால்நடைகள் நுழையாதபடி அகழி அமைத்து அதன் நடுவே உருளை பைப்புகள் பதிக்கப்பட்டுள்ளது.  இந்த உருளை பைப்புகள் இடைவெளி அதிகம் உள்ளன. எனவே இதில் நடந்து செல்பவர்களின் கால்கள் பைப்புக்குள் சென்று சிக்கிக் கொள்கின்றன. கடந்த ஆண்டு அலுவலக நுழைவு வாயிலில் உள்ள அகழியில் சுமார் 10க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கால்கள் சிக்கி தவித்தனர். இதனால் ஆட்சியர் நிர்வாகம் அகழியில் மண் நிரப்பி தீர்வு கண்டது.

அதேசமயம் அலுவலகத்தின் பின்புற வாயிலில் உள்ள அகழியின் பள்ளத்தை மூடவில்லை. இதன் காரணமாக கடந்த வாரம் கலெக்டர் அலுவலகம் வந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அகழியின்  உருளை சாலையை கடந்தபோது அவரது கால் உருளைக்குள் சென்று சிக்கிக்கொண்டது. இதில் துடிதுடித்த முதியவரை  அக்கம்பக்கத்தினர் நீண்ட நேரம் போராடி மீட்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை இந்த அகழியை தாண்டிய ஒரு பசுமாட்டின் முன்னங்கால் உருளை   பைப்புக்குள்  சென்று சிக்கிக்கொண்டது. இதனால் அந்த மாடு கதறி  துடித்தது. இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் உருளையை நெம்புகோல் கொண்டு நெம்பி  மாட்டின் காலை வெளியே எடுத்தனர். நீண்ட நேரம் போராடியதன் காரணமாக மாட்டின் கால் எலும்பு சேதம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மிக அதிக இடைவெளியுடன் கூடிய உருளையை அகழியில் வைத்துள்ளதால் பொது மக்களும் கால்நடைகளும் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனை தடுக்க மாவட்ட ஆட்சியர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Office ,Theni Collector ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...