×

தைப்பூச விழாவில் அடாவடி காட்டிய ஹோம்கார்டுகள் பக்தர்கள் கடும் அதிருப்தி

காரைக்குடி, ஜன.29: காரைக்குடி அருகே குன்றக்குடி கோவில் தைப்பூச விழாவில் ஹோம்கார்டு பணியில் இருந்தவர்கள் அடாவடியாக நடந்து கொண்டது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் கோவிலில் தைப்பூச விழா கடந்த 18ம் தேதி அனுக்ஞை விக்னேசுவர பூஜையுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 19ம் தேதி கொடியேற்றமும், ஒவ்வொரு நாளும் வெள்ளி கேடகம் உள்பட பல்வேறு வாகனங்களில் வீதிஉலாவும் நடந்தது. 27ம் தேதி தேரோட்டம் நடந்தது. நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு காரைக்குடி, சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

பக்தர்களை முறைப்படுத்தவும், கூட்டத்தை கட்டுப்படுத்தவும் வசதியாக போலீசாருடன் இணைந்து 40க்கும் மேற்பட்ட ஹோம்கார்டுகள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். போலீசாரை தவிர மற்ற காவல் பணியில் ஈடுபடுபவர்கள் கையில் லத்தி வைத்துக் கொள்ள கூடாது, ஆனால் பணியில் இருந்த ஒருசில ஹோம்கார்டுகள் கையில் குச்சியை வைத்துக் கொண்டு பக்தர்களை அடிக்க பாய்வது, திட்டுவது போன்ற அடாவடி செயல்களில் ஈடுபட்டனர். ஒருசில இடங்களில் போலீசார் இல்லாமல் ஹோம்கார்டு மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த இடங்களில் ஹோம்கார்டுகள் சிலர் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், போலீசாருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஹோம்கார்டு பணியில் உள்ள சிலர் பயன்படுத்துகின்றனர். சிலர் தங்களது வாகனங்களில் போலீஸ் என எழுதி உலா வருகின்றனர். மக்களின் பாதுகாப்புக்காக இருக்க வேண்டிய இவர்கள் அநாகரீகமான வார்த்தைகளால் பேசுவது கண்டிக்கத்தக்கது. பொதுமக்கள், பெண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என இவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். தவிர போலீசார் உள்ள இடங்களில் மட்டும் அவர்களுக்கு துணையாக நிறுத்த வேண்டும். தனியாக அதிகாரத்தை வழங்கக் கூடாது என்றனர்.

Tags : Devotees ,festival ,Adavati ,
× RELATED திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி...