×

திருமங்கலம் அருகே ஜெயலலிதா கோயில் முதல்வர் நாளை திறப்பு அமைச்சர் உதயகுமார் பேட்டி

திருமங்கலம், ஜன. 29: திருமங்கலத்தை அடுத்த குன்னத்தூரில், மதுரை-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு ஜெ.பேரவை சார்பில் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் திறப்பு விழா குறித்து அமைச்சரும், ஜெ.பேரவை செயலாளருமான ஆர்பி உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் ஜெயலலிதாவிற்கு கோயில் திறக்கப்பட உள்ளது. நாளை (ஜன.30) முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் அம்மா கோயிலை திறந்து வைக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் 234 தொகுதியை சேர்ந்த மூத்த அதிமுக நிர்வாகிகளுக்கு நலத்திட்டங்களும், மதுரை மேற்குமாவட்ட அதிமுகவை சேர்ந்த 120 மூத்த நிர்வாகிகளுக்கு பசும் கன்றும் முதல்வர் வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். தமிழகம் முழுவதுமிருந்து அதிமுக தொண்டர்கள் அதிகளவில் கலந்து கொள்கின்றனர். பரமக்குடி மற்றும் சோழவந்தானில் இருந்து தொண்டர்கள் பால்குடம் எடுத்து வருகின்றனர். கோயில் வளாகத்திற்குள்ளேயே போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டி மையம் உள்ளிட்ட மையங்கள் அமைய உள்ளன. மதுரைக்கு இந்த கோயில் முன்மாதிரியாக திகழும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அன்னதான வழங்க ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். ஜெயலலிதாவின் ராசி சிம்மம் என்பதால் கோயில் வளாகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு அருகே சிங்கம் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Tags : Jayalalithaa ,Udayakumar ,temple chief ,Thirumangalam ,interview ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...