- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கேரளா
- கவர்னர்
- கர்நாடக
- காங்க்
- பெங்களூரு
- டேவர்சந்த்கெலாட்
- கிராட்னா
- கர்நாடக சட்ட கவுன்சில்
பெங்களூரு: கர்நாடக சட்ட பேரவையில் அரசின் உரையை முழுமையாக வாசிக்காமல் இரண்டே நிமிடத்தில் 3 வரிகளை ரத்தின சுருக்கமாக பேசிவிட்டு அவையில் இருந்து ஆளுநர் தாவர்சந்த்கெலாட் வெளியேறியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைகளில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை வாசிக்காமல் புறக்கணித்து வெளியேறினார்.
இதே போல் கேரளா சட்டப்பேரவையில் ஆளுநர் ராஜேந்திர அர்லிகர் உரையை பாதி வாசித்து வெளியேறினார். அதே போல் காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்திலும் அந்த மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் 3 வரிகளை மட்டுமே வாசித்து விட்டு வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரை தயாரித்து கர்நாடக அரசு அனுப்பி வைத்து இருந்தது.
அதில் ஒன்றிய பாஜ அரசு, மகாத்மா காந்தி அடிகள் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அத்துடன் அதன் பெயரையும் விபி ஜி ராம்ஜி என மாற்றியது. ஒன்றிய பாஜ அரசின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் அதில் பல வாசகங்கள் இருந்தன. இதனால் அதிருப்தி அடைந்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஆளுநர் உரையை புறக்கணிப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து கர்நாடக அமைச்சர்கள் நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் கெலாட்டை சந்தித்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து கர்நாடக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க ஆளுநர் சம்மதம் தெரிவித்தார். நேற்று காலை 11 மணி அளவில் அவைக்கு வந்த ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை முதல்வர் சித்தராமையா மற்றும் சட்டப்பேரவை தலைவர்கள் வரவேற்றனர்.
அதை தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்க தொடங்கிய தாவர்சந்த் கெலாட், ‘மேலவை தலைவர், பேரவை சபாநாயகர் , முதல்வர் , எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள உள்ளிட்ட உறுப்பினர்களை வரவேற்கிறேன்; அவையில் பேசுவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்’ என கூறிவிட்டு உடனே ஆளுநர் உரை புத்தகத்தின் கடைசி பக்கத்தை புரட்டி, ‘எனது அரசு பொருளாரத்தை இரண்டு மடங்காக வளர்ச்சி அடைவதற்கும் சமூக மற்றும் வளர்ச்சிக்கான திட்டங்கள் வகுத்து செயல்படுகிறது.
ஜெய் ஜிந்த், ஜெய் கர்நாடகா ஜெய் அரசியல் அமைப்பு ‘என இரண்டே நிமிடத்தில் பேசி முடித்தார். அத்துடன் ஒரு துளி கூட தாமதிக்காமல் இருக்கையில் இருந்து கீழே இறங்கி அவையில் இருந்து வெளியே செல்ல தொடங்கினார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே ஆளுநர் அவையில் இருந்து வெளியேறியதால் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து அவரை சூழ்ந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.
அதே நேரம் எதிர்க்கட்சியான பாஜ மற்றும் மஜத உறுப்பினர்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக குரல் எழுப்பியதால் அவையில் கூச்சம் குழப்பம் ஏற்பட்டது. இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அரசு தயாரித்து அளித்த உரையை படிக்காமல் சொந்தமாக உரை நிகழ்த்தி அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறியுள்ளார். இதை கண்டித்து கர்நாடக மாநிலம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம் நடத்தும். மேலும் ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகவும் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என்றார்.
* ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவு கட்டுவதே தீர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: முதலில் தமிழ்நாடு, அடுத்து கேரளம், இப்போது கர்நாடகா. இதன் நோக்கம் தெளிவானது, வேண்டுமென்றே செய்வது. மாநில அரசுகள் தயாரித்தளிக்கும் உரையை ஆளுநர்கள் வாசிக்க மறுத்து, குறிப்பிட்ட கட்சியின் முகவர்கள் போல நடந்துகொள்வது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்தும் செயலாகும்.
நான் முன்பே தெரிவித்தபடி, சட்டமன்றத்தில் ஆண்டின் முதல் கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்கும் நடைமுறைக்கு முடிவுகட்டுவதே இதற்கான தீர்வாக அமையும். இந்தியா முழுவதும் இந்த கருத்தைக் கொண்டிருக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளோடும் கலந்தாலோசித்து, வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே இந்த பயனற்ற, நடைமுறைக்கு பொருந்தாத வழக்கத்தை ஒழிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரத் தி.மு.க. போராடும்.
