×

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்

உடுமலை, ஜன.29: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டக் குழு தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் குமார் ஆகியோர் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 13, 14, 15, 16-ம் தேதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ள சேதம் ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் திருப்பூர் விடுபட்டுள்ளது. ஆனால் உடுமலை, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம் வட்டங்களில் நெல் பயிர் விளையும் தருவாயில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் கடும் சேதம் ஏற்பட்டு எவ்வித பயனும் இன்றி நாசம் அடைந்துள்ளது.

அதேபோல், ஆண்டுக்கு ஒருமுறை பயிர் செய்யும் கொண்டக்கடலை, கொத்துமல்லி போன்ற பயிர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தீவனச் சோளம், வெங்காயம், காய்கறிப் பயிர்கள் சேதம் ஏற்பட்டுள்ளது. மக்காச்சோள பாதிப்பும் அதோடு கால்நடைத் தீவனமாக பயன்படும் தட்டு, வைக்கோல் உட்பட எவ்வித பயனும் இன்றி அழுகி வீணாகியுள்ளன. ஊத்துக்குளி, அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மானாவாரி தீவன சோளத்தட்டை அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர் மழையால் பெரும் நாசமாகிவிட்டது.

வருடம் முழுவதும் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகின்றனர். மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் சேதாரமாகியுள்ளதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். எனவே, திருப்பூர் மாவட்டத்தை மழை வெள்ளம் பாதித்த மாவட்டமாக அரசின் பட்டியலில் சேர்த்து, பயிர்வாரி பாதிப்புகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags : floods ,
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி