×

கோவை, போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவை, ஜன. 29:  கோவை  மற்றும் போத்தனூர் வழித்தடத்தில் வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக  ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் - கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையே  28ம் தேதி முதல் வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து 28ம் தேதி (நேற்று)முதல், வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 5.15 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் எர்ணாகுளத்தைச் சென்றடையும்.

மறு மார்க்கமாக, எர்ணாகுளத்தில் இருந்து 31ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் காலை 6.50 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில், செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டாடா நகரைச் சென்றடையும். இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், குடூர், நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், பார்வதிபுரம், சம்பல்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இதேபோல், தெலங்கானா மாநிலம் கச்சேகுடா - கர்நாடக மாநிலம் மங்களூரு இடையே கோவை வழித்தடத்தில் 28ம் தேதி முதல் வாராந்திரச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

கச்சேகுடா நிலையத்தில் இருந்து 29ம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 6.05 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9.30 மணிக்கு மங்களூருவைச் சென்றடையும். மறுமார்க்கமாக, மங்களூரு நிலையத்தில் இருந்து 30ம் தேதி முதல் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8.05 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் இரவு 11.40 மணிக்கு கச்சேகுடா  நிலையத்தைச் சென்றடையும். இந்த வாராந்திரச் சிறப்பு ரயில்கள் காசர்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, கோழிக்கோடு, திரூர், ஷோரனூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேனிகுண்டா உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Tags : Coimbatore-Bothanur ,
× RELATED போதை மாத்திரை விற்றவர் கைது