×

கருங்கல்பாளையம் சந்தையில் 90 சதவீத மாடுகள் விற்பனை

ஈரோடு, ஜன.29: ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று மாடுகள் வரத்தும், விற்பனையும் அதிகரித்தது.ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே வியாழன்தோறும் மாட்டு சந்தை கூடும். இந்த சந்தைக்கு வரத்தாகும் மாடுகளை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று கூடிய மாட்டு சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும் வரத்து அதிகமாக இருந்தது. அதன்படி, நேற்று கூடிய சந்தையில் பசு-450, எருமை-300, கன்று-100 என 850 மாடுகள் வரத்தானது. இதில், பசு மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரையும், கன்று ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விற்பனையானது.

மேலும், தமிழக அரசின் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மற்றும் தென்மாவட்டங்களின் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பயனாளிகள் கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மாடுகளை வாங்கி சென்றனர். இதனால், இந்த வாரம் கூடிய சந்தையில் 90 சதவீதம் மாடுகள் விற்பனையானது. இதனால், மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்ததாக மாட்டு சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Karungalpalayam ,
× RELATED பறக்கும் படை அதிகாரிகளின்...