×

தைப்பூசத்தை முன்னிட்டு கொங்காலம்மன் கோயிலில் தேரோட்டம்

ஈரோடு, ஜன.29: ஈரோடு கொங்கலம்மன் கோயில் தைப்பூசத்தையொட்டி நேற்று காலை தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர். ஈரோடு கொங்கலம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி, இந்தாண்டு தேர்த்திருவிழா கடந்த 19ம் பூச்சாட்டப்பட்டு, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, மாலையில் அம்மன் உள் பிரகாரம் வலம் வரும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. 26ம் தேதி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், மாவிளக்கு மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை 8.45 மணிக்கு நடந்தது.  தேரோட்டத்தை ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. தென்னரசு, முன்னாள் மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன், கோயில் செயல் அலுவலர் முத்துசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து, திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் கோயில் முன் துவங்கி, ஆர்கேவி ரோடு, மணிக்கூண்டு, பொன்வீதி வழியாக சென்று மதியமே தேர் மீண்டும் கோயில் நிலை வந்தடைந்தது.

தேரோட்டத்தையொட்டி மணிக்கூண்டு, ஆர்கேவி ரோடு, பன்னீர்செல்வம் பார்க் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தேர் செல்லும் பகுதிகளில் மின்வாரியத்தினர் சில மணி நேரம் மின் இணைப்பை துண்டித்தனர். இதைத்தொடர்ந்து இன்று (29ம் தேதி) காலை 9 மணிக்கு விடையாற்றி உற்சவம் மற்றும் மஞ்சள் நீராட்டும், காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு கோயிலில் தெப்போற்சவமும் நடைபெற உள்ளது.

Tags : Therottam ,Kongalamman ,Thaipusam ,
× RELATED முதலாமாண்டு மாணவர் சேர்க்கை...