×

விவசாயிகள் கவலை டெல்டாவில் பலத்த மழையால் பாதிப்பு வைக்கோல் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கும்பகோணம், ஜன.28: டெல்டாவில் பலத்த மழையால் வைக்கோல் கடும் பாதிப்பு ஏற்பட்டதால் வைக்கோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் சுமார் 3 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டது. இதில் தற்போது அன்னப்பன்பேட்டை, மெலட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை தொடங்கப்பட்டுள்ளது. தற்போது காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் சாகுபடி செய்துள்ள சம்பா தாளடி நெற்பயிர்களில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் 80 சதவீதம் வைக்கோல்கள் நாசமானது.

காவிரி டெல்டா பகுதி வைக்கோல்கள் நன்கு தரமாக இருக்கும் என்பதால் பெரம்பலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்ட பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்காக வைக்கோல் கட்டுக்களை விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மழையினால் வைக்கோல்கள் நாசமானதாலும் தஞ்சை மாவட்டத்தை தவிர வழக்கம்போல் செல்லும் மற்ற வெளி மாவட்டங்களுக்கு வைக்கோல் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டுகளில் வைக்கோல் கட்டுக்கள் சுமார் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இந்தாண்டு வைக்கோல்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒரு கட்டு சுமார் ரூ.300 முதல் ரூ.400க்கு மேல் விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வைக்கோல் வியாபாரி மோகன் கூறுகையில், கடந்தாண்டுகளில் வைக்கோல்களை, வயலுக்கு வந்து அறுவடை செய்து நெல் மணிகளை கொடுத்து விட்டு, வைக்கோல் கட்டுக்களை வாங்கி செல்வார்கள். இதற்காக புரோக்கர் மூலம் வைக்கோல் கட்டுக்கள் விற்பனை நடைபெறும். காவிரி டெல்டா பகுதியிலுள்ள வைக்கோல்களுக்கு தனி மதிப்புண்டு. மற்ற மாவட்டங்களில் விளையும் வைக்கோல்களை விட இப்பகுதியிலுள்ள வைக்கோல்களை விரும்பி வாங்கி செல்வார்கள். ஆனால் இந்தாண்டு கடும் மழையால் வைக்கோல்கள் நாசமானது. இதனால் விவசாயிகள், வேறு வழியின்றி, அப்படியே நெற்கதீர்களுடன் உழவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தாண்டு வைக்கோல்கள் அளவுக்கதிகமாக விலை ஏற்றம் பெறவும், கடும் தட்டுப்பாடு ஏற்படவும்அதிக வாய்ப்புள்ளது என்றார்.

Tags : shortage ,delta ,
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!