×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி நாகேந்திரனின் சகோதரர் திடீர் உயிரிழப்பு

மாதவரம், ஜன.22: சென்னை வியாசர்பாடி பகுதியில் ரவுடியாக வலம் வந்தவர் நாகேந்திரன். இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை பெற்று வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடி பல்வேறு கொலைகளை இவர் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் கடைசியாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நாகேந்திரன் உயிரிழந்தார். நாகேந்திரனின் உடன் பிறந்த தம்பி ரமேஷ்(45), வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 17வது பிளாக்கில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பிறகு நாகேந்திரன் உறவினர்கள் அனைவரையும் போலீசார் கண்காணித்தனர். நாகேந்திரனின் உறவினர் வீடுகளில் இருந்து சுமார் 51 கத்திகள் பறிமுதல் செய்தனர். இதில், நாகேந்திரனின் தம்பி ரமேஷ் என்பவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரமேஷுக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திடீரென உடல்நிலை மோசமடைந்த ரமேஷை குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, ரமேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், ரமேஷின் உடல் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. உயிரிழந்த சரித்திர பதிவேடு ரவுடி ரமேஷ் மீது இரண்டு கொலை வழக்குகள், மூன்று கொலை முயற்சி வழக்குகள் உட்பட 16 குற்ற வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Nagendran ,Armstrong ,Madhavaram ,Vyasarpadi ,Chennai ,Vellore ,
× RELATED அரசுக்கு சொந்தமான 6.2 கிரவுண்டு நிலம் மீட்பு