×

புதுக்கோட்டை விஜய் பேலஸ் விஜய விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை, ஜன. 28: புதுக்கோட்டை டவுன் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள விஜய் திருமண மஹால் முன்பாக புதிதாக கட்டப்பட்டுள்ள விஜய விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதற்கான அனுக்ஞை, ஈஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணஹூதி ஆகிய பூஜைகள் கடந்த 25ம் தேதி காலை 4.30 மணி முதல் துவங்கி மாலை 9 மணி வரை நடந்தது. 26ம் தேதி இரண்டாம், மூன்றாம், நான்காவது காலபூஜை, லட்சுமி பூஜை நடந்தது. இதைதொடர்ந்து நேற்று காலை யாத்ர தானம் நடந்தது. பின்னர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றிய பின்பு பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது அப்போது ஆளில்லா குட்டி விமானம் மூலம் புனிதநீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடந்தது. கோயில் கும்பாபிஷேகம் மற்றும் யாகசாலை பூஜைகளை பேரையூர் ராஜ கார்த்திகேயன் சிவாச்சாரியர் முன்னின்று நடத்தினார். மேலும் விஜய விநாயகர் கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகளை தொழிலதிபர் பழனிவேல் மற்றும் அவரது சகோதரர்கள் முருகானந்தம், ரவிச்சந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேக விழாவில் புதுக்கோட்டை நகர பொதுமக்கள், ஆன்மிக நண்பர்கள், தொழிலதிபர்கள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Pudukkottai Vijay Palace Vijaya Ganesha Temple Kumbabhishekam ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு