மாயமான சிறுவன் ஏரியில் சடலமாக மீட்பு

ஆவடி: ஆவடி அடுத்த அய்யப்பாக்கம், வீட்டுவசதிவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் செண்பகம். இவரது கணவர் முனிசாமி இறந்துவிட்டார். இவர்களுக்கு காளிதாஸ் (22), கணேஷ் (14), ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். காளிதாஸ், தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கணேஷ்  அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 25ம் தேதி உறவினரின் திருமணத்துக்கு செண்பகம் சென்றார். அன்று காளிதாசும் வேலைக்கு சென்றுவிட்டர். கணேஷ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளான். காளிதாஸ் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்தபோது கணேஷ் வீட்டில் இல்லை.

தம்பி கணேஷை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து காளிதாஸ் நேற்றுமுன்தினம் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாம்வின்செண்ட் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து கணேஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அயப்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாயில் கணேஷின் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். கணேஷ் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories:

>