கேக் என்பது விழாக்காலங்களில் குறிப்பாக கிறிஸ்துமஸ், நியூ இயர், பிறந்தநாள் விழாக்கள் நிச்சயம் கேக் இல்லாமல் கடந்து செல்ல முடியாது. ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டும் காலம் முழுக்க இனிப்பில் கட்டுப்பாடுதான். அவர்களுக்காகவே அவர்கள் எவ்வித தயக்கமும் இல்லாமல் சாப்பிடுவதற்காகவே இந்த மல்டி மில்லட் கேக் செய்து கொடுக்கலாம். ஆனால் இது ஒரு அளவில் சாப்பிடுவது நல்லது. இந்த கேக் மைதா, வெள்ளை சர்க்கரை இல்லாமல், குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட சிறுதானியங்களால் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்
ராகி மாவு – ½ கப்
சாமை மாவு – ¼ கப்
குதிரைவாலி (கொள்ளு) மாவு – 2 டேபிள்ஸ்பூன்
ஓட்ஸ் மாவு – ¼ கப்
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – ¼ டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
முட்டை – 2
அல்லது
தயிர் (கெட்டியாக) – ¾ கப்
ஆலிவ் ஆயில் / தேங்காய் எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்
நாட்டு சர்க்கரை / ஸ்டீவியா – தேவைக்கேற்ப (குறைந்த அளவு)
வெனிலா எசென்ஸ் – ½ டீஸ்பூன்
இலவங்கப்பட்டை தூள் – ½ டீஸ்பூன் (சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு உதவும்)
நறுக்கிய பாதாம் / வால்நட் – 2 டேபிள்ஸ்பூன் (தேவைப்பட்டால்)
செய்முறை
அனைத்து சிறுதானிய மாவுகளையும், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு சேர்த்து நன்கு சலித்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை நன்கு அடிக்கவும். முட்டை பயன்படுத்தவில்லை என்றால் தயிரை மென்மையாக கலக்கவும். அதில் எண்ணெய், ஸ்டீவியா அல்லது நாட்டு சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது உலர் கலவையை மெதுவாக சேர்த்து, கட்டியில்லாமல் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு வெந்நீர் அல்லது பால் சேர்க்கலாம்.நறுக்கிய நட்ஸ்களை சேர்த்து கலக்கி, எண்ணெய் தடவிய கேக் டின்-இல் ஊற்றவும்.
170°C-ல் முன்கூட்டியே சூடாக்கிய ஓவனில் 30-35 நிமிடங்கள் பேக் செய்யவும். மேலே சொன்னது போலவே ஏர்ஃப்ரை மற்றும் குக்கரிலும் பேக் செய்யலாம். கத்தியால் அல்லது ஸ்பூன் பின்புறம் குத்தி பார்த்து சுத்தமாக வந்தால் கேக் தயாராகிவிட்டது என அர்த்தம்.
இந்த கேக் மெதுவாக செரிக்கும் கார்போஹைட்ரேட்கள் கொண்டது.
நார் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சர்க்கரை உடனடியாக உயர்வதில்லை.
சர்க்கரை அளவை மிகவும் குறைவாக வைத்துக் கொள்ளலாம் அல்லது முற்றிலும் தவிர்க்கலாம். டைப் 2, டைப் 3 நீரிழிவு நோயாளிகள் வாரத்தில் 1-2 முறை, சிறிய துண்டாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
– எஸ்.விஜயலட்சுமி
