சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

கடலூர், ஜன. 28: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது. கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூரை சேர்ந்தவர் சிவா. இவரது மகன் ராஜ்குமார் என்கிற ஊமையன் (23). இவர் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி, அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தனியாக டிவி பார்த்து கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். உடனே அந்த சிறுமி, வீட்டுக்குள் சென்று தண்ணீர் எடுத்து வந்தார். அப்போது ராஜ்குமார் திடீரென கட்டிபிடித்து  சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, ராஜ்குமாரின் கையை கடித்து விட்டு, அருகில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு ஓடிச்சென்று நடந்த சம்பவம் கூறி அழுதுள்ளார்.பின்னர் இது குறித்து சிறுமியின் தாய், ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர்.இந்த வழக்கு கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து நீதிபதி எழிலரசி தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜரானார்.

Related Stories:

>