×

விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி நெல் கட்டுகளை தூக்கி செல்லும் அவலம் தரைப்பாலம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

விருத்தாசலம், ஜன. 28: விருத்தாசலம் அருகே மணிமுக்தாற்றில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி நெல் கட்டுகளை தூக்கி செல்லும் அவலம் நிலவுகிறது.  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கார்குடல் ஊராட்சி, மணிமுக்தாற்றின் கரையோரம் அமைந்துள்ளதால், மணிமுக்தாற்றை கடந்து சென்று சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் நெல், கரும்பு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். பாலம் வசதி இல்லாததால், ஆற்றில் நடந்து சென்று விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாக மணிமுக்தாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து சென்று கொண்டுள்ளது. தற்போது சம்பா பருவம் முடிவடைந்து நெல்மணிகள் அறுவடை செய்யப்பட்டுள்ளன. ஆனால் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை கொண்டுவர வழியின்றி ஆற்றில் கழுத்தளவு தண்ணீரில் நடந்து சென்று நெல் கட்டுகளை தங்கள் பகுதிக்கு கொண்டு வருகின்றனர். வெள்ளநீர் அபாயம் தெரியாமல் ஆற்றில் இறங்கி செல்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, தற்போது சம்பா நெல் சாகுபடிக்காக கையில் வைத்திருந்த பணம் மட்டுமின்றி, கடன் வாங்கியும், கழுத்து கைகளில் இருந்த நகைகளை அடகு வைத்தும் நெல் விவசாயம் செய்து வந்தோம். அறுவடை சமயத்தில் மழை பெய்து நெல் அனைத்தும் சேதமடைந்ததுடன் கிடைத்த நெல்லையாவது அடித்து அதனை விற்பனை செய்யலாம் என நினைத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை சம்பளத்திற்கு வைத்து தலையில் சுமந்து கொண்டு வெளியே கொண்டு வந்து அடித்து பின், நெல்லை விற்பனை செய்யும் நிலை உள்ளது. எனவே, கார்குடல் மணிமுக்தாற்றில் தற்காலிக தரைப்பாலம் அமைத்து தர வேண்டும், என்றனர்.

Tags : land bridge ,Vriddhachalam ,
× RELATED மாத்திரை வாங்குவது போல் நடித்து பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு