பாஜகவுக்கு திடீர் கண்டீஷன் என்.ஆர். காங்கிரஸ்தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் முதல்வர் வேட்பாளர் மோதலால் சிக்கல்- ரங்கசாமிக்கு காங்,. தூது

புதுச்சேரி, ஜன. 28:  புதுச்சேரி ஆளும் காங்கிரசில் அமைச்சராக இருந்த நமச்சிவாயம், ஊசுடு தொகுதி எம்எல்ஏ தீப்பாய்ந்தான் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். புதுச்சேரி திரும்பும் அவர்கள், வரும், 31ம் தேதி ஏஎப்டி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதோடு, தங்களது ஆதரவாளர்களையும் கட்சியில் முறைப்படி இணைப்பதற்கு தயாராகி வருகின்றனர். ஆளும் காங்கிரசில் இருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் வெளியேறும் சூழல் உள்ளதால் புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.  ஆனால் மேலும் சில எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறினால் அரசு கவிழும் நிலை ஏற்படலாம். இந்த நிலைமையை தவிர்க்கும் வகையில் அமைச்சர் கந்தசாமி மற்றும் காங், நிர்வாகிகள் சிலரும் ரங்கசாமிக்கு மறைமுகமாக தூதுவிட்டுள்ளனர். காங்கிரஸ் அரசை கவிழ்க்க முடியாது, என். ஆர் காங்கிரசின் 7 எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவிப்பார்கள் என அமைச்சர் கந்தசாமி கூறியுள்ளார். இதற்கு ரங்கசாமி எவ்வித ரியாக்ஷனையும் வெளிப்படுத்தவில்லை. வரும் தேர்தலில் பாஜக கூட்டணியில் என். ஆர் காங்கிரஸ் உறுதியாக இடம்பெறுமா? என்பது கடைசி கட்ட மாறுதலுக்கு உட்பட்டது. புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரசுக்கு அடுத்தபடியாக பலமான கட்சி நாங்கள்தான், எனவே தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி கூட்டணிக்கு தலைமை தாங்குவது போல, புதுச்சேரியில் கூட்டணிக்கு என். ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமிதான் தலைமை ஏற்பார்.

மேலும் 20 தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளோம். மீதமுள்ள 10 தொகுதிகளை அதிமுகவும்- பிஜேபியும் எப்படி வேண்டுமனால் பிரித்துக்கொள்ளட்டும். இப்படி நடந்தால் கூட்டணி குறித்து ரங்கசாமி பரிசீலிப்பார், இல்லாவிட்டால், தனித்து களமிறங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டு விடுவார்.   கூட்டணிக்கு ரங்கசாமி தலைமை ஏற்கும் போது, அவர்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜக ஏற்றுக்கொண்டாக வேண்டும்.  பாஜகவின் முதல்வர் வேட்பாளர் நமச்சிவாயம் முன்மொழியப்படுவார் என தகவல் வெளியாகி வரும் நிலையில், என். ஆர் காங்கிரஸ்- அதிமுக- பாஜக கூட்டணியை உறுதி செய்வதில் பல சிக்கல்கள் எழுந்து வருகின்றன. இதற்கிடையே வரும் 31ம் தேதி பாஜக தேசியத்தலைவர் ஜேபி நட்டா புதுச்சேரி வருகை தரவுள்ளார். தனியார் ஓட்டலில் மதியம் 1.45 முதல் 2.45 வரை மதிய விருந்துக்கு என். ஆர் காங்கிரஸ்- அதிமுக தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.   இதில் என். ஆர் காங்கிரஸ் கலந்து கொள்ளும் என அக்கட்சி தலைவர் ரங்கசாமி  தெரிவித்துள்ளார்.  கூட்டணிக்கு என். ஆர் காங்கிரஸ்தான் தலைமை ஏற்கும், முதல்வர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என ஜேபி நட்டாவிடம் நேரில் வலியுறுத்தவுள்ளார்.

 இப்படி நடந்தால் முதல்வர் வேட்பாளர் நமச்சிவாயமா? ரங்கசாமியா? என்பதில் குழப்பம் ஏற்படும். இதனை பயன்படுத்தி ரங்கசாமியை காங்கிரஸ் கட்சி வளைத்து போடலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆனால் இதற்கு  வாய்ப்பு மிகவும் குறைவுதான் என்கின்றனர். ஏனெனில் காங்கிரசை எதிர்த்துதான் ரங்கசாமி கட்சி ஆரம்பித்தார். மீண்டும் அதே தவறை செய்துவிடமாட்டார் என என். ஆர் காங்கிரசார் தெரிவித்துள்ளனர். நட்டாவிடம் பேசுவோம்-ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி  என்.ஆர்.காங்கிரஸ் அலுவலகத்தில்  ஆன்-லைன் உறுப்பினர் சேர்க்கை கட்சி  தலைவர் ரங்கசாமி தலைமையில் நடந்தது. ஆன்- லைன் முறையில் புதிய உறுப்பினர்  சேர்க்கையை ரங்கசாமி துவக்கி வைத்து, முதன்முதலாக தனது பெயரிலான ஆன்-லைன்  உறுப்பினர் அட்டையை எடுத்துக் கொண்டார். பின்னர் அனைத்து நிர்வாகிகளையும்  இதே முறையில் உறுப்பினர்களை சேர்க்கும்படி கேட்டுக் கொண்டார். இதில்  எம்எல்ஏக்கள் ஜெயபால், கோபிகா, நிர்வாகிகள் பிரகாஷ்குமார், ஜவஹர் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நிருபர்களுக்கு ரங்கசாமி அளித்த பேட்டி : என்.ஆர்.காங்கிரஸ்  பாஜக கூட்டணியில் தான் இருக்கிறது. நீங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக  நமச்சிவாயம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறதே? என்று கேட்டபோது? தேர்தலுக்கு இன்னும்  காலம் உள்ளது. அதற்குள்ளாக எப்படி முடிவு செய்வது?புதுச்சேரியில்  கூட்டணிக்கு யார் தலைமை என்பது பற்றி பாஜகவுடனான பேச்சுவார்த்தையில்  தெரியவரும்.  வரும் 31ம் தேதி புதுச்சேரி வரும் பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசுவோம்.  புதுச்சேரியில் சாலைகள் அனைத்தும் படுமோசமாக  குண்டும் குழியுமாக உள்ளன. இதனால் பொதுமக்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர்.  புதுச்சேரியில் எங்கும் செல்ல முடியவில்லை. பல இடங்களில் டிராபிக் ஜாம்  ஏற்படுகிறது. ஆளும்கட்சி இதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: