×

திண்டிவனம் கிடங்கல் கோட்டை ஏரி மதகு திடீர் உடைப்பு 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசம்

திண்டிவனம், ஜன. 28: திண்டிவனத்தில் ஏரி மதகு உடைந்து சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமானது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள ஏரிகளில் வரலாற்று சிறப்பு மிக்கது கிடங்கல் கோட்டை ஏரி. இந்த மதகு பழுதடைந்ததால் தேக்கி வைக்கப்பட்ட நீர் வீணாக வெளியேறி வருகின்றது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 1000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி, சுமார் 400 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இந்த ஏரியின் பாசனத்தின் மூலம் கிடங்கல் கோட்டை, பூதேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.  இந்நிலையில் இந்த ஏரியில் உள்ள கடைக்கோடி மதகு நேற்று திடீரென உடைந்து தண்ணீர் அருகிலுள்ள சுமார் 500 ஏக்கர் நெல் பயிர்களில் மூழ்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு உடைந்த மதகை விரைந்து சரி செய்ய உத்தரவிட்டார்.
அதன்பேரில் பொதுப்பணிதுறை அதிகாரிகள் மதகு உடைந்த பகுதியில் மணல் முட்டைகளை அடுக்கி தற்காலிகமாக நீர் வெளியேற்றத்தை தடுத்து வருகின்றனர்.

பழுதடைந்த மதகை பார்க்க பொதுமக்கள் அதிக அளவில் ஏரி கரை மேல் திரண்டனர். கரைகள் வலுவிழந்துள்ளதால் பொதுமக்கள் கரைமேல் செல்லாதவாறு பாதுகாக்கவும், கரை உடையும் நிலை உள்ளதால் நீர் செல்லும் வழியில் உள்ள வீடுகளில் உள்ள பொதுமக்களை பத்திரமாக மீட்டு பள்ளிகளில் முகாம்கள் அமைத்து தங்க வைக்கவும் மாவட்ட ஆட்சியர் நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார். மேலும் தீயணைப்பு வீரர்கள் பூதேரி பகுதியிலும், ஏரி உடைந்த பகுதிகளிலும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவிட்டார். அப்போது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்,  திட்ட இயக்குனர் மகேந்திரன், வட்டாட்சியர் செல்வம், டிஎஸ்பி கணேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறையினர், நகராட்சி ஊழியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர், தீயணைப்புத்துறையினர் உடன் இருந்தனர்.

Tags : breach ,paddy fields ,Tindivanam Warehouse Fort Lake Sudden ,
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை