×

ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கோரி பட நிறுவனம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி

புதுடெல்லி : நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்கக் கோரி பட தயாரிப்பு நிறுவனம் கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்சார் போர்டு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வாதிடும்போது, படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதால், படம் மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வுக் குழுவின் பரிந்துரைகளில் திருப்தியில்லை என்றால் ஒரு திரைப்படத்தை மறுபரிசீலனைக்காக மறு ஆய்வு குழுவிற்கு அனுப்ப சென்சார் போர்டு தலைவருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார்.

தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் வாதிடும்போது, படத்தை முதலில் பார்த்த குழுவினர் ஒருமனதாக சான்று வழங்க முடிவு செய்தனர். படத்தை பார்த்த சென்சார் போர்டு குழு உறுப்பினர் புகார் தெரிவிக்க முடியாது. படத்தை பார்த்த உறுப்பினர் பரிந்துரை மட்டுமே வழங்க முடியும். உறுப்பினர் இப்போது புகார்தாரராகியுள்ளார். படத்தை பார்த்த 5 பேரில் 4 பேர் அதாவது பெரும்பான்மை உறுப்பினர்கள் படத்துக்கு சான்று வழங்க பரிந்துரைத்துள்ளனர். பெரும்பான்மை இல்லாவிட்டால் மட்டுமே மறு ஆய்வு செய்ய முடியும். ஒரு உறுப்பினர் எப்படி பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவை செல்லாது என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களைக்கேட்ட நீதிபதி, படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும் என்று கடந்த 9ம் தேதி காலையில் உத்தரவு பிறப்பித்தார். இதனைஎதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய பெஞ்சில் அன்றைய தினம் மாலையிலேயே விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், உத்தரவுக்கு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டிய அவசரம் என்ன என கேள்வி எழுப்பினர்.

இதற்கு, சென்சார் போர்டு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரியும், அவகாசம் வழங்காமல், உடனடியாக சான்று வழங்கும்படி தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்காத நிலையில், அந்த உத்தரவை தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து பட நிறுவனம் வழக்கு தொடரவில்லை. அதனால் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.

அப்போது, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தணிக்கை குழு படத்திற்கு சான்று வழங்க பரிந்துரைத்த நிலையில் மறு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால்தான் வழக்கு தொடர்ந்தோம் என்றார். அப்போது நீதிபதிகள், சென்சார் போர்டு பதில் தருவதற்கு எந்தவித அவகாசமும் தராமல் உத்தரவு பிறப்பிக்க என்ன அவசியம்? படத்துக்கு சான்று பெறும் முன்பு வெளியீட்டு தேதி அறிவித்தது ஏன்?. சென்சார் போர்டு சான்று வழங்க பல்வேறு நடைமுறைகள் இருக்கும் போது, சான்றுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

அதை விடுத்து நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லாரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்று வழங்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், சென்சார் போர்டு மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்குமாறு பட நிறுவனத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 21ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதனிடையே, படத்தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கும் சென்சார் போர்டு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் திபங்கள் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது. படநிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார். அவர் வாதிடுகையில் தணிக்கை வாரியத்தின் அனுமதிக்கு முன்பே வெளியீட்டுத் தேதியை அறிவிப்பது என்பது நீண்ட காலமாகப் பின்பற்றப்படும் ஒரு தொழில் நடைமுறை. இந்தப் படத்துக்காக 5000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, என்றார்.

அப்போது நீதிபதி திபங்கர் தத்தா, ஒரு நீதிபதி அமர்வு இந்த வழக்கை ஒரே நாளில் விரைவாக முடித்து வைத்த விதம் குறித்து கருத்து தெரிவித்தார். மேலும், ஜனவரி 6ம் தேதி தணிக்கை வாரியத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட,வழக்கை மறுஆய்வுக் குழுவுக்குப் பரிந்துரைத்த உத்தரவு மேல் முறையீடு செய்யப்படவில்லை என்பதையும் நீதிபதி தத்தா சுட்டிக்காட்டினார். 2 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை ஜனவரி 20ம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை, என்றார்.

அப்போது, மறுஆய்வுக் குழுவுக்குப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஜனவரி 5ம் தேதி தணிக்கை வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல் மீது மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.இதுவும் ஜனவரி 6ம் தேதி உத்தரவும் ஒன்றுதான். ஜனவரி 5ம் தேதி உத்தரவை எதிர்த்துதான் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருந்தபோது ஜனவரி 6ம் தேதி உத்தரவு பதிவேற்றம் செய்யப்பட்டது, என்றார். அப்போது நீதிபதி ‘‘ஜனவரி 6ம் தேதி உத்தரவை எதிர்த்து ரிட் மனுவில் திருத்தம் செய்திருக்க வேண்டும்’’, என்றார். இதைத் தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் பெஞ்ச்சில் ஜனவரி 20ம் தேதி உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Democrat ,New Delhi ,Supreme Court ,Vijay ,Dandanayakan ,
× RELATED அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; முதலிடம்...