×

அம்மையப்பனில் பட்டா, மின்விளக்கு வசதி கேட்டு உண்ணாவிரதத்தில் ஈடுபட முயற்சி 75 பேர் கைது

திருவாரூர், ஜன. 27: தஞ்சையில் இருந்து நாகை வரையில் 2 வழிச்சாலை அமைக்கும் பணிக்காக தேசிய நெடுஞ்சாலை துறையினர் மூலம் நிலம் எடுக்கும் பணி நடைபெற்று தற்போது சாலை அமைக்கும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. அதன்படி திருவாரூர் தாலுகா அம்மையப்பன் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் வசித்து வந்த 22 குடும்பங்களை சேர்ந்தவர்களின் வீடுகள் இந்த சாலை பணிக்காக அகற்றப்பட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இழப்பீடு பெற்றுக் கொண்ட 22 குடும்பத்தை சேர்ந்தவர்களும் அங்கிருந்து தங்களது வீடுகளை காலி செய்து அருகில் ஓடும் போக்கி ஆற்று கரையில் புறம்போக்கு இடத்தில் குடிசை அமைத்து கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தாங்கள் வசித்து வரும் இடத்திற்கு மின்வசதி மற்றும் பட்டா வழங்க வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளித்து வரும் நிலையில் அவர்கள் வசித்துவருவது நீர்நிலை புறம்போக்கு இடம் என்பதால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டா வழங்க இயலாது என வருவாய்த்துறையினர் தெரிவித்து அதற்கேற்ப மாற்று இடம் வழங்குவதாக கூறி வருகின்றனர். ஆனால் 3 ஆண்டுகள் கடந்த நிலையிலும் மாற்று இடம் வழங்கப்படாத நிலையில் 22 குடும்பங்களை சேர்ந்தவர்களும் தாங்கள் வசித்து வரும் பகுதிக்கு அம்மா நகர் என்றும் பெயரிட்டுள்ள நிலையில் வருவாய்த் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் குடியரசு தினமான நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சிமன்ற அலுவலகம் முன்பாக கருப்புக் கொடியுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனையடுத்து கொரடாச்சேரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 75 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமணம் ஒன்றில் தங்க வைத்தனர். அதன் பின்னர் தாசில்தார் நக்கீரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.


Tags : hunger strike ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரையில் இன்று திமுக உண்ணாவிரத போராட்டம்