×

தொழில் துவங்க தொடர் சோதனை அவசியம்!

நன்றி குங்குமம் தோழி

‘‘சுவை மற்றும் தரத்தில் மாற்றமில்லாமல் மிகச் சிறந்த கஸ்டமைஸ்ட் பேஸ்டரி வகைகளை என்னால் சிறப்பாக தயாரிக்க முடியும். இதற்காகவே உலகில் சிறந்த பேஸ்டரி மையத்தில் ஒரு வருடப் பயிற்சியினை மேற்கொண்டிருக்கிறேன்’’ என பெருமிதமாக சொல்கிறார், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா பாலசுப்பிரமணியம். பேக்கரி துறையில் முன்னேற முறையான பயிற்சியும், திறமையான கிரியேட்டிவிட்டியும் தேவை என்று கூறும் இவர், கேக் மட்டுமின்றி இதர பேக்கரி பொருட்களை வீகன் முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். குறிப்பாக வீகன் முறையில் ப்ரெஞ்சு மேக்ரூன் வகைகளை செய்து தருவதில் வல்லவர். தான் முறையாக கற்றக் கலையினை பயிற்சி வகுப்புகள் மூலம் மற்றவர்களுக்கும் சொல்லித் தருகிறார்.

‘‘முதலில் ஆன்லைனில் பார்த்து கேக் மற்றும் பேக்கரி பொருட்களை தயாரித்தேன். நன்றாக வந்தது. ஆனால், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கேக்குகளை தயாரிக்க முறையான பயிற்சிகள் அவசியம் என்று புரிந்து கொண்டேன். அதற்காக ஸ்பெயின், பார்சிலோனாவில் உள்ள புகழ்பெற்ற பேஸ்டரி மையத்தில் சேர்ந்து ஒரு வருடப் பயிற்சி பெற்றேன். அங்கு கேக் தயாரிப்பில் பல நுட்பங்கள் மற்றும் நுணுக்கங்களை கற்றுக் கொண்டேன். அது எனது கேக் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பதற்கும் விற்பனை செய்வதற்குமான பல்வேறு யுக்திகளை கற்றுத் தந்தது. மேலும், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. தற்போது வீட்டிலிருந்தே இதனை தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் மூலமாகவும் நிறைய ஆர்டர்கள் குவிந்து வருகிறது. மேலும், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறேன்’’ என்றவர் வீகன் கேக்குகள் பற்றி விவரித்தார்.

‘‘என்னுடைய சிறப்பம்சம் வீகன் கேக்குகள்தான். மற்ற ரெகுலர் கேக்குகள் குறித்து பல பயிற்சி மையங்கள் இருக்கின்றன. ஆனால், வீகனுக்கான தனிப்பட்ட பயிற்சிகள் அதிகளவில் இல்லை. அதனால் வீகன் தயாரிப்புகளுக்காகவே ஒரு சிறப்புப் பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. கேக் தயாரிப்பில் நான் ஒவ்வொன்றையும் தேடித் தேடி கற்றுக் கொண்டேன்.

அதனை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. என்னுடைய கேக்கினை விரும்பியவர்கள் பலர் பயிற்சி வகுப்புகளை துவங்க சொன்னார்கள். அதன் அடிப்படையில்தான் நான் இதனை துவங்கினேன். Basic vegan cakeology வகுப்புகளில் அதற்கு தேவைப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் செய்முறை, கேக் தயாரிக்க தேவையான உபகரணங்கள் எவ்வாறு அலங்கரிப்பது என அனைத்தும் கற்றுத்தருகிறேன்.

இதனைத் தொடர்ந்து Macaron குறித்த பயிற்சியும் அளிக்கிறேன். Choux pastryக்கான வகுப்புகளும் உள்ளது. வீகன் குக்கீஸ், பிரெட் ரோல்ஸ், ஜாம், க்ளூடன் இல்லாத கேக்குகள் என பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுக்கிறேன். என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் தற்போது தனியாக கேக் தயாரித்து விற்பனை செய்தும் வருகிறார்கள்’’ என்றவர் மேக்ரூனை வீகன் முறையில் தயாரிப்பது குறித்து விவரித்தார்.

‘‘மேக்ரூனில் முக்கிய உணவே முட்டைதான். பொதுவாக முட்டையின் வெள்ளைக் கருவுடன் சர்க்கரையை கலந்து அடித்து, பாதாம் பவுடரை சேர்த்து மேக்ரூன் தயாரிப்பார்கள். நாங்க வீகன் முறையில் வெள்ளைச் சுண்டல், உருளைக்கிழங்கு புரோட்டீன் பவுடர்கள் மூலமாக முட்டையின் வெள்ளைக் கருவின் அதே சுவையினை கொடுக்க முடியும். மேலும், நாங்க அதிகளவில் சர்க்கரை சேர்ப்பதில்லை. பால் பொருட்களுக்கு பதில் தாவரங்கள் மற்றும் உலர்ந்த பருப்புகளில் இருந்து எடுக்கப்படும் பாலை பயன்படுத்துகிறேன். மேலும், புதிய யுக்திகளை பயன்படுத்தி விதவித சுவைகளில் மேக்ரூன்களை தயாரித்து வருகிறேன். இதற்கான மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வரவழைத்து செய்கிறேன்.

ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதால் சத்துக்கள் அதிகமாகும் என்ற கருத்துக்கள் உண்டு. கேக் மற்றும் பேக்கரி பொருட்கள் பொறுத்தவரை அதற்கான ஆராய்ச்சி முடிவுகள் இல்லை. ஆனால், சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படும் கேக்குகளில் கூடுதல் நன்மைகள் இருக்கலாம். பொதுவாக கேக் மற்றும் பேக்கரி உணவுகள் விழாக்காலங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது என்பதே உண்மை.

இன்று வியாபார தந்திரமாக பார்க்கப்படும் இது போன்ற சிறுதானிய கேக்குகளில் சுவையில் மாற்றங்கள் இருக்கலாமே தவிர இரண்டுமே கேக் வகையினை சேர்ந்ததுதான். தினந்தோறும் குழந்தைகளுக்கு சாப்பிட ஏற்றது என்பது மார்க்கெட்டிங் டெக்னிக் மட்டுமே. மேலை நாடுகளில் இது குறித்த விழிப்புணர்வு நிறைய இருக்கிறது. அங்கு பால் பொருட்கள் சார்ந்த அலர்ஜி உடையவர்களுக்கு சிறப்பு கேக் மற்றும் குளூட்டன் ப்ரீ கேக்குகள் மட்டுமே வேறுபட்டவை என்பதை அறிவார்கள். மற்ற வகை கேக்குகள் அனைத்தையுமே ஒரே மாதிரியாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், இந்தியாவில் மட்டும் கேக்குகள் குறித்த பார்வைகள் வேறு மாதிரியாக விளம்பரப்படுத்தப்படுகிறது.

பேக்கரி உணவுகளை தயாரிக்கும் ேபாது, எதனை எந்த விகிதத்தில் சேர்க்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். காரணம், உடல் நலனுக்கு பாதுகாப்பானது மற்றும் அதன் பயன்பாடுகள் என்ன என்பது குறித்து முறையான பயிற்சிகள் அவசியம். பயிற்சி வகுப்புகளில் சேர்ந்த சில நாட்களிலேயே தொழிலை தொடங்கினால் பலன் இருக்காது. தொழிலை தொடர்ந்து நடத்த பயிற்சி மட்டுமில்லாமல் தொடர் சோதனை முயற்சிகளும் அவசியம். அனுபவம் நமக்கு பல விஷயங்களை கற்றுத் தரும்.

தற்போது சிறிய யூனிட் வைத்து கேக் மற்றும் பேக்கரி பொருட்களை தயாரித்து வருகிறேன். எதிர்காலத்தில் பெரிய அளவில் பேஸ்டரி கடை ஒன்றை திறக்க வேண்டும் என்பது என் ஆசை. குறிப்பாக வீகன் உணவுகளை அதில் விற்பனை செய்ய வேண்டும். மேலும், தனி பயிற்சி மையம் ஒன்றையும் நிர்வகிக்க வேண்டும். எனது பணிகளுக்காக சிறந்த தொழில்முனைவோர் விருது கிடைத்தது. வெளிநாடுகளில் புகழ்பெற்ற செஃப்களிடம் இருந்தும் பாராட்டுகள் பெற்றிருக்கிறேன். இவைதான் என்னை இந்த துறையில் மேலும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும், பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறது’’ என்கிறார் ஐஸ்வர்யா பாலசுப்பிரமணியம்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

Tags : Chennai ,
× RELATED 77 வயது மாரத்தான் வீராங்கனை!