சேலம்: ஏற்காடு தனியார் காட்டேஜிக்கு தர்மபுரி பேஸ்புக் காதலியை அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரித்ததில், ரூ.7 லட்சத்தை திரும்ப தராததால் தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிரபல தனியார் பள்ளி பின்புறம் உள்ள தனியார் காட்டேஜில், ஒரு அறையில் இளம்பெண் நேற்று முன்தினம் இரவு அரை நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்து ஏற்காடு போலீசார் சென்று விசாரித்தபோது, நேற்று முன்தினம் மதியம் வாலிபருடன் அந்த இளம்பெண் அறை எடுத்து தங்கியதாக மேலாளர் தெரிவித்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர், தர்மபுரி மாவட்டம் ஏரியூரை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சாலா(33) எனத்தெரியவந்தது. கணவர் பிரிந்து சென்றதால், 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மகன், 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளுடன் வசித்துள்ளார். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை பூசாரியூர் காட்டுவளவை சேர்ந்த பார்த்திபன் (35) என்பவருடன் சாலாவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அவருடன் ஏற்காட்டிற்கு வந்து தங்கியது தெரியவந்தது.
இதையடுத்து சாலாவின் கள்ளக்காதலன் பார்த்திபனை தனிப்படை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். விசாரணையில் எலக்ட்ரீசியனான அவருக்கு மனைவி மற்றும் 7 வயதில் ஒரு மகன் உள்ளதும், 4 ஆண்டுகளுக்கு முன் பேஸ்புக் மூலம் சாலாவுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் முதலில் மெசேஜ் மட்டும் அனுப்பி பின்னர் நேரில் பார்த்து நெருங்கி பழகியுள்ளனர். பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். அவ்வப்போது பார்த்திபனிடமிருந்து ரூ.7 லட்சம் வரை சாலா வாங்கியுள்ளார். கடந்த சில மாதங்களாக பார்த்திபன் பணத்தை திரும்ப கேட்டும் அவர் கொடுக்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சாலாவை பைக்கில் அழைத்துக்கொண்டு ஏற்காட்டிற்கு பார்த்திபன் வந்துள்ளார். அங்கு தனியார் காட்டேஜில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அங்கு உல்லாசமாக இருக்க தயாரான போது, பணத்தை பார்த்திபன் திரும்ப கேட்டுள்ளார். அதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். அப்போது சேலையால் கழுத்தை இறுக்கி சாலாவை கொலை செய்துவிட்டு, பார்த்திபன் தப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது. பேஸ்புக் காதலியை ஏற்காட்டிற்கு அழைத்து வந்து கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* போலீசில் போட்டு கொடுத்த நண்பன்
காதலி சாலாவை ஜாலியாக ஏற்காட்டிற்கு டூர் போகலாம் எனக்கூறியே கள்ளக்காதலன் பார்த்திபன் அழைத்துச் சென்றுள்ளார். ஏற்காடு சென்றதும், கடும் குளிரோடு இயற்கை எழிலை சுற்றி பார்த்துள்ளனர். பிறகு ரூம் போட்டு உல்லாசமாக இருக்கலாம் என காட்டேஜிக்கு அழைத்துச் சென்று, மதியம் முதல் மாலை வரை தங்கியிருந்துள்ளார். கொலையை அரங்கேற்றிய பின் அறை கதவை பூட்டிவிட்டு, பார்த்திபன் மட்டும் வெளியேறியுள்ளார்.
இதனை காட்டேஜ் மேலாளர், ஊழியர் என யாரும் கவனிக்கவில்லை. சேலம், இளம்பிள்ளை திரும்பியதும் நண்பரிடம் இதுபற்றி பார்த்திபன் கூறியுள்ளார். அவர்தான் காட்டேஜில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் நேரில் சென்று சோதனையிடும் போது தான், காட்டேஜ் ஊழியர்களுக்கே கொலை சம்பவம் நடந்தது தெரிந்துள்ளது.
* காட்டேஜிக்கு சீல் வைப்பு
இளம்பெண் கொலை நடந்த காட்டேஜ், உரிய அனுமதி பெற்று இயங்கவில்லை என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஏற்காடு தாசில்தார் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், சொந்த வீட்டை உரிய அனுமதியின்றி காட்டேஜ் போன்று மாற்றி பயன்படுத்தி வந்ததால், அதனை பூட்டி சீல் வைத்தனர்.
