வேர்க்கடலை வெண்பொங்கல்
தேவையானவை:
பச்சரிசி – 1 கப்,
பச்சை வேர்க்கடலை – ½ கப்,
பச்சை மிளகாய் – 3,
வெங்காயம் – 1,
சீரகப்பொடி – 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தில் நீர் ஊற்றி பச்சரிசியையும், வேர்க்கடலையையும் கழுவி வேகவைக்கவும். வெந்ததும் மஞ்சள் தூள், சீரகப்பொடி போட்டு கலந்து உப்பு போட்டு கிளறி வேக வைத்து இறக்கவும். வாணலியில் கடுகு தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் நறுக்கியது தாளித்துக் கொட்டி கலந்து சிறு தீயில் வைத்திருந்து இறக்கவும். சுவையான சத்தான வேர்க்கடலை பொங்கல் தயார்.
பொங்கல் குழம்பு
தேவையானவை:
மொச்சைக் கொட்டை,
வேர்க்கடலை – தலா ¼ கப்,
சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 2,
சேனைக்கிழங்கு – ¼ கப்,
மஞ்சள் பூசணி – 1,
புளிக்கரைசல் – 2 டம்ளர்,
பரங்கிக்காய் – ¼ கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
வெல்லம், மஞ்சள் தூள் – சிறிது.
வறுத்துப் பொடிக்க:
வரமிளகாய் – 4,
மிளகு – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்,
தனியா – 3 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – ½ கப்.
தாளிக்க:
கடுகு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – சிட்டிகை,
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது.
செய்முறை:
மொச்சை, வேர்க்கடலையை 3 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். வாணலியில் வறுக்க கொடுத்தவற்றை வறுத்து, மிக்ஸியில் பொடித்து, நீர் விட்டு அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு போட்டு காய்கறிகளை ஒரே அளவாக போட்டு பாதி அளவு வெந்ததும், வெந்த மொச்சை, வேர்க்கடலை சேர்த்து வெந்ததும் அரைத்த விழுதை சேர்த்து இரண்டு கொதி வந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து மல்லித்தழை தூவி இறக்கவும். சுவையான பொங்கல் குழம்பு தயார்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பச்சடி
தேவையானவை:
சர்க்கரைவள்ளிக்கிழங்கு – ¼ கிலோ,
வெல்லம் – 1 கப்,
தேங்காய் துருவல் – கால் கப்,
ஏலப்பொடி – சிட்டிகை,
நெய் – 2 டீஸ்பூன்,
முந்திரி – 10.
செய்முறை:
சர்க்கரைவள்ளிக் கிழங்கை சிறு துண்டுகளாக்கி வேகவைத்து எடுக்கவும். வெந்தபின் வெல்லம், தேங்காய் துருவல், ஏலப்பொடி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக வெந்தபின் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து இறக்கவும். சுவையான, சத்தான சர்க்கரைவள்ளிக்கிழங்கு பச்சடி தயார்.
