×

நான்கு மீனவர்களை கொன்ற இலங்கை கடற்படை வீரர்கள் மீது கொலை வழக்குப்பதிய வேண்டும் தமுமுக வலியுறுத்தல்

தொண்டி, ஜன.27: ராமநாதபுரம் மாவட்டம் கடல் சார்ந்த பகுதியாக இருப்பதால் இங்கு பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் உள்ளது. மாவட்டம் முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் மீன்பிடி தொழில் மூலம் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மறைமுகமாகவும் ஏராளமானோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மாவட்டத்தின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கும் மீனவர்களின் வாழ்வில் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாகவே உள்ளது. கடந்த சில வருடங்களாக இலங்கை கடற்படை அத்து மீறிய செயலில் ஈடுபட்டு வருகின்றது. படகுகள் பறிமுதல், மீனவர்கள் கைது, விரட்டி அடிப்பது என்று தொடர்ந்து, மீனவர்களை கொலை செய்யவும் துணிந்து விட்டனர். இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாநில செயலாளர் சாதிக பாட்சா கூறியது, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கொலை செய்துள்ளனர். தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வரும் இலங்கை அரசை கண்டிக்க மத்திய மற்றும் மாநில அரசு தயக்கம் காட்டுகிறது. மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்து வரும் நிலையில், தற்போது எல்லை மீறி உயிர்பலி வாங்கும் நிலைக்கு வந்துள்ளனர். இது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் உள்ளது. உடனடியாக இதற்ககு தீர்வு காணும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலங்கை கடற்படை வீரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’என்றார்.

Tags : sailors ,Tamumuka ,fishermen ,Sri Lankan ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...