குடியரசு தினவிழா கொண்டாட்டம் பயனாளிகளுக்கு ரூ.6.31 கோடி நலத்திட்ட உதவி வழங்கல்

திருப்பூர், ஜன.27:திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடியேற்றி வைத்து 222 பயனாளிகளுக்கு ரூ.6.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நாட்டின் 72வது குடியரசு தினவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி மைதானத்தில் குடியரசு தினவிழா நடந்தது. காலை 8.10 மணிக்கு கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்கு வந்த கலெக்டர் விஜயகார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றினார்.

பின்னர் போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அவர், தொடர்ந்து திறந்த ஜீப்பில் போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதையடுத்து, 222 பயனாளிகளுக்கு ரூ.6.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் விருதை வழங்கினார். மேலும், கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செலிவியர்கள், தன்னார்வலர்களுக்கு விருதுகளை வழங்கினார். விழாவில், போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், எஸ்பி. திஷாமிட்டல், மாவட்ட வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, மாநகர துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், சுந்தரவடிவேல் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related Stories: