×

எழில்மிகு ஆடையில் வந்தார்… ஏழையின் உடையில் திரும்பினார் மதுரையில் இன்று அரையாடைக்கு மகாத்மா மாறிய நூற்றாண்டு விழா-மகாத்மா பேத்தி, கொள்ளுப்பேரன் பங்கேற்பு

மதுரை : மகாத்மா காந்தியடிகள் மதுரையில் அரை ஆடை அணியும் மனமாற்றம் கண்ட நாளின் நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதில் அவரது பேத்தி, கொள்ளுப்பேரன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.விடுதலைப்போரில் மதுரையின் பங்கு மகத்தானது. மதுரைக்கு மகாத்மா காந்தியடிகள் 5 முறையும், மதுரை வழியாக ஒருமுறையும் வந்துள்ளார். 2வது முறையாக 1921ல் மதுரை வந்தபோதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்தது. காந்தி பயணித்த ரயில் மதுரை மாவட்டத்தை நெருங்கியபோது, ஜன்னல் வழியாக பார்வையிட்டபடியே வந்தார். அப்போது வயல்வெளிகளில் கிராம மக்கள், வெற்று உடம்புடன் மேலாடையின்றி உழைத்துக் கொண்டிருப்பதை கண்டார். தொடர்ந்து இதுபோன்ற காட்சிகளை கண்ட அவரது மனம் வேதனையடைந்தது.மேலாடை துறந்த மேலமாசி வீதி…1921, செப். 21ம் தேதி மாலை மதுரை வந்தடைந்த காந்தி, மேலமாசி வீதியில் ‘251 ஏ’ கதவு எண் கொண்ட நண்பரது வீட்டில் தங்குகிறார். அந்த இரவு முழுக்க, பயணத்தில் கண்ட விவசாயிகளின் அரையாடை காட்சி காந்திடியகளின் இதயத்தை என்னவோ செய்கிறது. வறுமையில் வாடிக்கிடக்கும் இந்த மக்களில் நானும் ஒருவன்தானே என்ற உணர்வில், சூட்டும், கோட்டும் என தன்னிடமுள்ள உயர்நிலை ஆடைகளை ஒருமுறை பார்க்கிறார். அப்படியே அந்த இரவும் கழிகிறது. மறுநாள் காந்தியடிகள் தங்கியிருந்த அந்த வீட்டின் முன்பு அவரைக் காண ஏராளமானோர் குவிந்திருந்தனர். காந்தியடிகள் தங்கியிருந்த அறை திறக்கப்படுகிறது. வெளியில் வந்த அவரை பார்த்ததும், அனைவரும் ஒரு கணம் அதிர்ந்து போகின்றனர். காரணம் காந்தியடிகள், ‘அரையாடை பக்கிரி’யாக காட்சி தருகிறார்.காந்திப்பொட்டல்…பாரிஸ்டர் பட்டம் வென்ற பட்டாடையில் ஜொலித்த, உலகமே வியந்து நோக்கும் உன்னதமான காந்தி அரை ஆடையில் தோன்றியதற்கான காரணத்தை அறிவதில் அத்தனை பேருக்குமே ஆவல் அதிகம். அன்றைய மாலைப்பொழுதில் மதுரை – ராமநாதபுரம் ரோட்டில் (இன்றைய காமராஜர் சாலையில்) உள்ள ஓரிடத்தில் காந்தியடிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் அண்ணல் காந்தியடிகள் தனது தோற்றம் குறித்து விளக்கிப் பேசுகிறார். அவரது இந்த முடிவை கேட்டு, கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. காந்தியடிகள் அரையாடை கண்ட மேலமாசிவீதி வீடும், தனது அரையாடைக்கான காரணத்தை விளக்கிய இந்த பொதுக்கூட்ட இடமும் இன்றும் மதுரையின் அடையாளம் காட்டி நிற்கின்றன. இந்த பொதுக்கூட்ட இடம், ‘காந்திப்பொட்டல்’ பெயர் பெற்றது. இவ்விடத்தில் நடிகர் சிவாஜிகணேசன் மன்றம், மதுரை காங்கிரஸ் கமிட்டி இணைந்து 1984ல் காந்தியடிகளுக்கு ஒரு சிலை அமைத்து பராமரித்து வருகின்றனர்.மதுரை என்றாலே பலதரப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் அரங்கேற்றம் கண்ட அற்புத ஊராகும். அந்த வரிசையில், தேசப்பிதா காந்தியடிகளின் ‘அரையாடை விரதம்’ அரங்கேறிய இடப்பெருமையையும் இந்நகரம் பெற்றுள்ளது. மகத்தான வரலாற்றை இந்த மதுரை மேலமாசிவீதியும், காந்திப் பொட்டலும் என்றென்றும் சுமந்து கொண்டிருக்கின்றன. இந்நிகழ்வின் நூற்றாண்டு விழாவால் மதுரை இன்று குதூகலம் கொள்கிறது.மதுரை காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் கூறும்போது, ‘‘குஜராத் பாரம்பரிய உடையிலிருந்து ஏழை விவசாயி உடையை காந்தியடிகள் மதுரையில்தான் தேர்ந்தெடுத்தார். 1921ல் நடந்த இந்நிகழ்வின் நூற்றாண்டை இன்று தொட்டிருக்கிறோம். இதையொட்டி அனைத்து காந்திய சர்வோதய இயக்கங்களின் சார்பில் செப். 22 (இன்று) காலை 8.30 மணிக்கு காந்தி மியூசியத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ஆடைப்புரட்சி செய்த பின்னர் முதல் சொற்பொழிவு நடத்திய காந்தி பொட்டல் பகுதியில் உள்ள சிலைக்கும் மாலை அணிவிக்கப்படுகிறது. மேலமாசி வீதியில் காந்தி தங்கி அரையாடை அணிந்த இல்லத்தில் சர்வ சமய வழிபாடு, மலரஞ்சலி நடத்தப்பட்டு காந்தி மியூசியம் திரும்புகிறோம். இங்கு காலை 11 மணிக்கு கல்லூரி மாணவ, மணவியர்களின் கருத்தரங்கு ‘ஜனநாயகமும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு காந்தி பஜன், சிறப்பு மலர் வெளியிடு நடக்கிறது. இம்மலரை ஐகோர்ட் நீதிபதி புகழேந்தி வெளியிடுகிறார். காந்தி அமைதி நிறுவன தலைவர் குமார் பிரசாந்த் பெற்றுக்கொள்கிறார். மகாத்மாவின் பேத்தி தாராகாந்தி பட்டாச்சார்யா, கொள்ளுப்பேரன் வித்தூர் மற்றும் மதுரை கலெக்டர் அனீஷ் சேகர் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். காந்தி அருங்காட்சியகத் தலைவர் மாணிக்கம், தேசிய காந்தி அருங்காட்சியக இயக்குநர் அண்ணாமலை உள்ளிட்ட காந்தியவாதிகள் பலரும் ஏற்பாடுகள் செய்துள்ளார்’’ என்றார்.காந்தியடிகளின் அரையாடை நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ‘காந்தியை மாற்றிய தமிழ்நாடு’ என்ற தலைப்பில் மதுரை உலகத்தமிழ் சங்க அரங்கிலும் காலை துவங்கி மாலை வரை இன்று மிகப்பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.குஜராத்தி ஜிப்பா… குறைந்து வேட்டியானது…காந்திகிராம பல்கலைக்கழக காந்திய சிந்தனைத்துறை பேராசிரியர் ரவிச்சந்திரன் கூறும்போது, ‘‘1880களில் லண்டனில் படிக்கிறபோதே ஆங்கில கனவான்கள் உடை உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை உடைகள் அணிந்தவர் காந்தியடிகள். குஜராத் உடையிலும் கூட உயர்நிலை உடைகளையே அணிவார். மதுரைக்கு 1921, செப். 21ல் வந்த காந்தியடிகள், குஜராத்தி உடையான அலங்கரித்த ஆடம்பரமான தலைப்பாகை, பெரிய ஜிப்பா, பின்னால் மடித்துக் கட்டிய நிலையிலான பெரிய வேட்டி என உயர்நிலை உடையணிந்திருந்தார். மறுநாள் செப். 22ல் அவரது உடை யாருமே எதிர்பார்த்திடாத மிக எளிய உடையாகிப் போனது. தலையை மொட்டை போட்டுக் கொண்டார். ஒரு பகுதி வேட்டியை முழங்கால் அளவுக்கே கட்டியபடி, ஒரு துண்டு மட்டுமே தோள் மீது போட்டிருந்த அந்தக்கோலம் அனைவரையும் அதிர்ச்சியுறச் செய்தது. மதுரையின் ஆன்மிக வெளிச்சமே தனக்கான மாற்றத்தைத் தந்ததாக நம்பிய காந்தியடிகளை இந்த மதுரை விவசாயி கோலத்தையே ஏற்க வைத்தது. அத்தோடு கதர் துணியை வலியுறுத்தும் முகமாகவே காந்தியை அவருக்குள்ளான உள்ளொளி வழிகாட்டியது’’ என்கிறார்….

The post எழில்மிகு ஆடையில் வந்தார்… ஏழையின் உடையில் திரும்பினார் மதுரையில் இன்று அரையாடைக்கு மகாத்மா மாறிய நூற்றாண்டு விழா-மகாத்மா பேத்தி, கொள்ளுப்பேரன் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Mahatma ,Ayatha ,Madurai ,Kuluberan ,Gandhiyadi ,Bulleperen ,
× RELATED வேதாரண்யத்தில் நாளை உப்பு...