ஆந்திரா: பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். EOS-N1 செயற்கைக்கோள் உள்பட 16 செயற்கைக்கோள்களுடன் PSLV-C62 ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவிற்கான தொலை தொடர்பு, வழிக்காட்டுதல் செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி . எல்விஎம் 3 போன்ற ராக்கெட்டுகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ விண்ணில் நிலைநிறுத்தி நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகிறது.
அதேபோல், வணிக ரீதியான பல செயற்கைக்கோள்களையும் அனுப்புகிறது. அந்தவகையில் ராணுவ பயன்பாட்டிற்காக ஒன்றிய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் உட்பட ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கெஸ்ட்ரல் இனிஷியல் டெமான்ஸ்ட்ரேட்டர் என்ற சிறிய செயற்கைக்கோள் மற்றும் இந்தியா, மொரீஷியஸ், லக்சம்பர்க், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஐரோப்பா மற்றும் அமெரிக்கா
முழுவதும் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் 17 துணை செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி – 62 ராக்கெட் இன்று காலை 10.17 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது .இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி சி-62 ராக்கெட் தனது இலக்கை அடையவில்லை, 3-வது நிலையில் சில இடையூறு ஏற்பட்டு ராக்கெட்டின் பாதை மாறிவிட்டது என இஸ்ரோ அறிவித்துள்ளது. திட்டம் தோல்வி அடைந்ததை அடுத்து தரவுகளை ஆராய்ந்து வருகிறோம் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

