கோயில், சர்ச், வீடு உள்பட 8 இடங்களில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை

செங்கல்பட்டு: சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் மசூதி தெரு, செல்லியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் விண்ணரசி மாதா கோயில், எபினேசர் தேவாலயம், ஈஸ்வரன் கோயில், அம்மன் கோயில் உள்ளிட்ட பல வழிபாட்டு  தலங்கள் உள்ளன. இந்த வழிபாட்டு தலங்களின் பூட்டை உடைத்து, அங்கிருந்த பரிசு பொருட்கள், ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அது மட்டுமில்லாமல், செல்லியம்மன் கோயில் தெருவில் உள்ள விக்னேஷ் என்பவரின் வீட்டை உடைத்து 10 சவரன் ,50 ஆயிரத்தை கொள்ளையடித்து உள்ளனர். மேலும், 2 வீடுகளிலும் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மறைமலைநகர்  போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

கொள்ளை சம்பவங்கள் நடந்த 5 கோயில்கள் மற்றும் 3 வீடுகளில் போலீசார் சோதனை செய்தனர். காஞ்சிபுரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள் இந்த இடங்களில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். புகாரின்பேரில், மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் மர்ம கும்பலை சேர்ந்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து கோயில், தேவாலயம் உள்பட 8 இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>