×

உலக கோப்பை டி.20 அணியில் இருந்து நீக்கம்; என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ அதனை யாராலும் தடுக்க முடியாது: இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பேட்டி

வதோதரா: இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில்இன்று மதியம் தொடங்கி நடந்து வருகிறது. முன்னதாக பயிற்சிக்கிடையே நேற்று இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டி:-

ஒருநாள் போட்டிகளில் எல்லா காலத்திலும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித்சர்மா ஒருவர். விராட் பாய் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே இந்த 2 பேரும் அணியில் இருப்பதால் எனது வேலை மிகவும் எளிதாகிறது. எப்போதாவது சவாலான நேரத்தில் இருக்கும்போது அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். ஏனெனில் அவர்கள் பெரும்பாலும், அத்தகையை சூழ்நிலைகளில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அளிக்கும் ஆலோசனை எந்த ஒரு கேப்டனுக்கும் மிகவும் மதிப்பு வாய்ந்தது.

நான் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு நிற்கிறேன். என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதனை யாராலும் தடுக்க முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை தீவிரமாக முயற்சித்து வருகிறேன். தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, இந்திய அணிக்கு எது நன்மையோ, அதனை எடுத்திருக்கிறார்கள். எப்போது கடந்த விஷயங்களை பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ யோசிக்கும் பழக்கம் இல்லை. வாழ்க்கையின் அந்தந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே நினைப்பேன்.

கடந்த முறை நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் நான் அறிமுகமானேன். அதனை என்னால் மறக்க முடியாது. இந்திய அணிக்காக விளையாடும் போது, ஒவ்வொரு வடிவமும் சவால் நிறைந்தது தான். ஏனென்றால் இந்திய அணி கடைசியாக 2011ல் உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் வெல்ல முடியவில்லை. ஒருநாள் வடிவம் எளிதானது என்று சொல்லிவிடலாம். ஆனால் கிரிக்கெட்டில் எந்த வடிவமும் எளிதாக இருக்காது. அதற்கான முயற்சியும், பயிற்சியும் அவசியம். மனதளவில் தயாராக வேண்டியதும் முக்கியம், என்றார்.

காயத்தால் ரிஷப் பன்ட் விலகல்;
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பன்ட் நேற்று வலை பயிற்சியில் பேட் செய்த போது, இடுப்பு பகுதியில் பந்து தாக்கி காயம் அடைந்தார். காயத்தின் வலியால் துடித்த அவர் துணை ஊழியர்களுடன் வெளியேறினார். காயம் காரணமாக இவர் தொடரில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அல்லது சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

Tags : World Cup T20 ,Shubman Gill ,Vadodara ,India ,New Zealand ,Vadodara, Gujarat ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!