×

திமுக ஆட்சியில் நியமனம், அதிமுக ஆட்சியில் நீக்கம் மக்கள் நலப்பணியாளர் வேலை கானல் நீரானது

வலங்கைமான், ஜன.26: தி.மு.க ஆட்சியில் மூன்றுமுறை பணியில் அமர்த்தப்பட்டு அ.தி.மு.க ஆட்சியில் மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் தமிழக அரசு பணி வழங்கி எங்களையும் வாழ விடுங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1990ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தபோது கிராமப்புற மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் எளிதில் சென்றடையும் வகையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வரும் ஏழை எளிய விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் வீட்டிலிருந்து பணியில் அமர்த்தப்பட்டு பணியாற்றி வந்தவர்கள் மக்கள் நலப் பணியாளர்கள். பின்னர் 1991ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அனைத்து மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. பின்னர் 1996ம் வருடம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு 500 ரூபாய் ஊதியத்தில் விருப்பத்தின் அடிப்படையில் 1996ம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி அனைத்து மக்கள் நலப் பணியாளர்களை பணி நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

1991 முதல் 1996 வரையிலான அதிமுக அரசின் காலத்தில் மீண்டும் பணி கேட்டு மக்கள் நலப்பணியாளர்கள் நடத்திய போராட்டங்களுக்கு அதிமுக அரசு சிறிதும் செவிசாய்க்கவில்லை. பின்னர் 1996ம் வருடம் மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக அரசு 500 ரூபாய் ஊதியத்தில் விருப்பத்தின் அடிப்படையில் 1997ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா பிறந்த செப்டம்பர் 15ம் நாள் 13,500 மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தியது. இதனை அடுத்து 5 ஆண்டுகள் பணியாற்றி வந்த மக்கள் நலப்பணியாளர்களை 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதே ஆண்டில் மே மாதம் 31ம் தேதி இரண்டாவது முறையாக அனைத்து பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது.

அப்போதும் பணி இழந்த மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் வேலை கானல் நீராகவே அதிமுக ஆட்சியில் இருந்து வந்தது. பின்னர் 2006ம் ஆண்டு மறுபடியும் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அதே ஆண்டில் ஜூலை மாதம் 3வது முறையாக 13,500 மக்கள் நலப் பணியாளர்களுக்கு பணி வழங்கி அவரது வாழ்க்கையில் மீண்டும் ஒளி ஏற்றி வைத்தது. அதைத் தொடர்ந்து சிறப்பாக 5 ஆண்டுகளாக மக்கள் நலப்பணியாளர்கள் கிராம ஊராட்சியில் அரசின் திட்டங்களுக்கும் மக்களுக்கும் இணைப்புப் பாலமாக செயல்பட்டு பணிகளை சிறப்பாக செய்திருந்தனர்.

அப்போது 2011ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு உள்ளாட்சித் தேர்தல்கள் முடிந்த பிறகு நவம்பர் மாதம் 8ம் தேதி இரவோடு இரவாக மூன்றாவது முறையாக 13,500 மக்கள் நலப் பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. இது மட்டுமின்றி அவர்களை சார்ந்த குடும்பங்களுக்கும் பேரிடியாக அமைந்தது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் தங்களது ஆட்சிக் காலத்தில் புதிய பணியிடங்களை உருவாக்கி பணியாளர்களை பணியில் அமர்த்தி கொள்வது வாடிக்கை. இருப்பினும் இந்த ஆட்சி காலத்தில் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் இந்த கட்சிகளைச் சார்ந்தவர்கள், அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என அரசு கருதுவது தவறாகும். அடித்தட்டு மக்களுக்கு உதவக்கூடிய வகையில் அரசுக்கும், மக்களுக்கும் இணைப்புப் பாலமாக செயல்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே மூன்று முறை பணி நீக்கம் செய்துள்ளது.

தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே அரசு பணியில் மூன்று முறை பணியில் அமர்த்தப்பட்டு மூன்று முறை பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மட்டும்தான் என்பதை நாடே அறியும். அதனை அடுத்து வலுவிழந்த மக்கள் நல பணியாளர்கள் மீண்டும் பணி வழங்க கோரி போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதம் சாலை மறியல் பிச்சையெடுக்கும் போராட்டங்கள் என பல்வேறு வகை போராட்டங்களை வடிவமைத்து மக்கள் நலப் பணியாளர் சங்கம் தொடர்ந்து போராடியது. இருப்பினும் அதற்கு அதிமுக அரசு சிறிதும் செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளாக பணி இழந்து மக்கள் நலப்பணியாளர் கள் குடும்பம் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இக்காலகட்டத்தில் சில மக்கள் நலப் பணியாளர்கள் போராட்டக் களத்திலும் இயற்கையாகவும், தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்தனர். பலர் குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் மாற்றுப் பணிகளை தேடிச் சென்றனர். இருப்பினும் பல பணியாளர்கள் இப்பணியினை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Tags : DMK ,regime ,AIADMK ,
× RELATED அவதூறு பேச்சுக்காக எடப்பாடி பழனிசாமி...