போபால்: மத்தியப் பிரதேசத்தில் மாட்டுச் சாணம் மற்றும் சிறுநீரைப் பயன்படுத்தி புற்றுநோய் சிகிச்சை மருந்து தயாரிக்கும் அரசு நிதியுதவி பெற்ற ஆய்வுத் திட்டத்தில், பெரும் நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜபல்பூரில் உள்ள நானாஜி தேஷ்முக் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வுத் திட்டத்திற்கு, மாநில அரசு சுமார் 3.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. மாட்டுச் சாணம், சிறுநீரில் இருந்து கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்க ஜபல்பூர் பல்கலை.யில் ரூ.3.50 கோடி செலவில் நடந்த ஆய்வில் முறைகேடு என விசாரணையில் தெரியவந்துள்ளது.
புற்றுநோய் போன்ற தீவிர நோய்களுக்குப் பாரம்பரிய முறையில் சிகிச்சை கண்டறிவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றாலும், கடந்த பத்து ஆண்டுகளாக இதில் முறையான அறிவியல் முடிவுகள் எட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த முறைகேடு புகார்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. ரூ.1.92 கோடிக்கு சாணம், சிறுநீர் வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது, மேலும் ஆய்வுக்காக பல நகரங்களுக்கு 24 முறை விமான பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
